ஆளுநர் இல்லாமல் கொல்கத்தா பல்கலைகழக பட்டமளிப்பு விழா நடைபெறும் : மேற்குவங்க அமைச்சர் தகவல்

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020 15:10

கொல்கத்தா,

கொல்கத்தா பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழா மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் இல்லாமல் நடைபெற வாய்ப்புள்ளது என அம்மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

வரும் ஜனவரி 28ம் தேதி கொல்கத்தா பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

இந்நிலையில் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மேற்குவங்க உயர் கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி அரங்குக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார்.

மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஆளுநர் ஜக்தீப் தங்கர் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருவதற்கு அமைச்சர் சட்டர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.

பொதுவாக மாநில பல்கலைகழகங்களின் வேந்தரான ஆளுநரை பட்டமளிப்பு விழாவுக்கு அழைக்க கூடாது என நாங்கள் நினைத்ததில்லை. ஆனால் ஆளுநர் ஜக்தீப் தங்கர் தொடர்ந்து மாநில அரசுக்கு எதிராக டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இது அவரது பதவிக்கு தகுதியான செயலில்லை.

அதன் காரணமாகவே கொல்கத்தா பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவை ஆளுநர் ஜக்தீப் தங்கர் இல்லாமல் நடத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பல்கலைகழக நிர்வாகம் தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவில் நாங்கள் தலையிட மாட்டோம் என அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் மற்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு இடையே கருத்து மோதல்கள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று மேற்குவங்க பல்கலைகழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளருக்கு ஆளுநர் ஜக்தீப் தங்கர் (நேற்று) அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அந்த கூட்டத்திற்கு துணைவேந்தர்கள் மற்றும் அதிகாரிகள் யாரும் வரவில்லை.