தமிழக மக்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் பொங்கல் நல்வாழ்த்து

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020 12:33

சென்னை,

பொங்கல் மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, வைகோ, விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் வாழ்த்து

பொங்கல் திருநாளின் தொடக்கமானது அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும், செழிப்பையும் அள்ளித்தர வாழ்த்துகின்றேன்.

தை திருநாளில் நாம் பெற்ற அளவற்ற அறுவடைக்காக இயற்கைக்கு நமது பிரார்த்தனைகளையும், நன்றியையும் செலுத்துவோம் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறி உள்ளார்.

முதலமைச்சர் வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் பொங்கல் வாழ்த்துச் செய்தியில்,

தமிழ்நாடு அரசு, வேளாண் பெருமக்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

வைகோ வாழ்த்து

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில்,

எவ்வளவு மனச்சுமைகள் இருந்தாலும், அவற்றை மறந்து, நம்பிக்கையோடு, தைப்பொங்கலை கொண்டாடும் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மகிழ்ச்சியூட்டும் காலத்தை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்போம் எனவும் கூறியிருக்கிறார்.

விஜயகாந்த் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி, ஒளிமயமான எதிர்காலம் உருவாக வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.