திருமண யோகம் தரும் ஜெனக நாராயண பெருமாள்!

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாளுக்கு வெள்ளை மொச்சை படைத்து வழிபட்டால் திருமண யோகம் கைகூடும்.

மதுரையை ஆட்சி செய்த சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது இக்கோயில். 1600 ஆண்டுகள் பழமைமிக்க இங்கு மூலவர் சாளக்கிராம கல்லால் ஆனவர். இத்தலம் ‘பாகனுார் கூற்றத்து சோழ குலோத்துங்கத்து சதுர்வேதி மங்கலம்’ என அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. கோயிலுக்கான நிர்வாகச் செலவை வெற்றிலை பயிரிடுபவர்கள் செலுத்த வேண்டும் என்றும், அதைப் போல மூன்று மடங்கு தொகை பாண்டிய மன்னரால் வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ராமர், அவரது மாமனார் ஜனகர் இவ்வூர் வழியாக வந்ததாக ஒரு தகவலும் உண்டு.

சித்ரா பவுர்ணமியன்று மதுரை வைகையாற்றில், அழகர் இறங்கும் வைபவம் நடக்கும். மன்னர்கள் காலத்தில் இந்த விழா சோழவந்தான் வைகையாற்றில் நடந்து வந்தது. இதற்காக சோழவந்தானுக்கு அருகிலுள்ள தேனுார் சென்று மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் வழங்கி வந்தார் பெருமாள். இந்த விழாவை மன்னர் திருமலை நாயக்கர் மதுரை நகருக்கு மாற்றினார். ஆனால், இங்கும் சித்ரா பவுர்ணமியன்று ஆற்றில் இறங்கும் வைபவம் விமரிசையாக நடக்கிறது.

மூலவர் ஜெனக நாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் காட்சியளிக்கிறார். பெருமாள் கோயில்களில் நடக்கும் எண்ணெய் காப்பு, தைலக்காப்பு சாத்தி திரையிடும் வழக்கம் இங்கு கிடையாது. சுக்கிரத்தலமான இங்கு திருமணத்தடை உள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளுக்கு, வெள்ளை மொச்சை படைத்து வழிபட்டு பலனடைகின்றனர்.

ஜெனகவல்லித் தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். ஜெயவீர ஆஞ்நேயருக்கு சனிக்கிழமையன்று துளசி, வடைமாலை சாத்தி வழிபட நினைத்தது நிறைவேறும். கோயில் சிறியதாக இருந்தாலும் பிருந்தாவனம் மற்றும் அமைதியான சுற்றுச்சூழல் காரணமாக தெய்வீகத் தன்மையுடன் திகழ்கிறது. கோயிலின் பழமை பேசும் வட்டெழுத்துக் கல்வெட்டு பிரமிப்பை அளிக்கிறது. 700 ஆண்டு பழமைமிக்க குதிரை வாகனம் இங்குள்ளது.

இருப்பிடம்: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து 20 கி.மீ., துாரத்தில் சோழவந்தான்.

விசேஷ நாட்கள்: வைகுண்ட ஏகாதசி, பங்குனியில் 10 நாள் விழா, சித்ரா பவுர்ணமி 3 நாள் விழா.

நேரம்: காலை 7.00 -– 12.00 மணி; மாலை 4.30 -–- 8.30 மணி.

அருகிலுள்ள தலம்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில்.