பிரபல சூரியக்கோயில்கள்!

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020

 இந்தியாவில் புகழ்மிக்க சூரியக்கோயில்களில் சில கீழே இடம்பெற்றுள்ளன.

* கயா தட்சிணார்கா கோயில்

பீகார் மாநிலம் கயாவில் உள்ள தட்சிணார்கா கோயிலில் ‘சூர்யகுண்டா’ என்னும் குளம் உள்ளது. இங்கு பக்தர்கள் தர்ப்பணம் செய்கின்றனர். தர்ப்பணப் பொருளை சூரியனே முன்னோரிடம் சேர்ப்பதாக ஐதீகம். கிரானைட் கல்லாலான சூரியன் சட்டையுடன், இடுப்பில் வளையமும், காலில் பூட்சும் அணிந்துள்ளார். 13ம் நுாற்றாண்டில் ஆந்திரா வாரங்கல்லை ஆட்சி செய்த பிரதாபருத்ரா என்ற மன்னர் இக்கோயிலைக் கட்டினார். சென்னையிலிருந்து கயாவுக்கு ரயில் உள்ளது. துாரம் 1782 கி.மீ.,

* யூனோ பாலாஜி கோயில்

மத்திய பிரதேசம் டட்டியா மாவட்டத்தில் உள்ள யூனோவில், பாலாஜி சூரியக்கோயில் உள்ளது. இங்குள்ள சூரியனை ‘பிரம்மண்யதேவ்’ என்கின்றனர். குஷ்டம், தோல் நோயில் இருந்து நிவாரணம் பெற சிறப்பு வழிபாடு நடக்கிறது. கறுப்பு நிறத் தகடுகளால் மூடப்பட்ட செங்கல் மேடையில் சூரியன் சிலை உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஜான்சி செல்லும் ரயிலில் சென்றால் டட்டியா அல்லது ஜான்சியில் இறங்கலாம். இங்கிருந்து 252 கி.மீ., துாரம் பஸ் அல்லது காரில் செல்லலாம். மொத்த துாரம் 2050 கி.மீ.,

* சூர்யபஹார் கோயில்

அசாம் மாநிலம் கோல்பரா அருகே சூர்யபஹார் மலையில் சூரியக்கோயில் உள்ளது. இது வட்ட வடிவ மாளிகை போல் இருக்கும். புராணங்களில் கூறியுள்ளபடி சூரியனுக்குரிய 12 சித்திரங்களும், அவற்றின் நடுவில் அவரது தந்தை காஷ்யப முனிவரின் சித்திரமும் வரையப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூரியனின் கையிலும் இரு ஆயுதங்கள் உள்ளன. தொல்லியல் துறையின்கீழ் இக்கோயில் இருந்து வருகிறது. சென்னையில் இருந்து 2,579 கி.மீ.

* கோனார்க் சூரியக்கோயில்

கோனார்க் என்பதற்கு ‘மூலையில் சூரியன்’ என பொருள். இக்கோயிலைக் கட்டியவர் நரசிம்ம தேவா. சூரியனைச் சுமக்கும் ஏழு குதிரைகள், கிழமைகளையும், தேரிலுள்ள 24 சக்கரங்கள் 24 மணி நேரத்தையும் குறிக்கின்றன. ஏழு நாட்களும் 24 மணி நேரமும் உழைப்பவர் சூரியன். ஒடிசா மாநிலத்தின் தலைநகரமான புவனேஸ்வரில் இருந்து 64 கி.மீ., பூரியில் இருந்து 35 கி.மீ., துாரம். சென்னையில் இருந்து 1261 கி.மீ.,