ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020

* பகீரதப்பிரயத்தனம் என்றால் என்ன? ஆர். பாலு சந்தியா, நாகர்கோவில்.

பகீரதன் ஒரு மன்னன். சாபத்தினால் அவனது முன்னோர் முக்தியடைய முடியாமல் இறந்தும் துன்புற்றனர். இதனால் பகீரதனுக்கும் பல இன்னல்கள் தோன்றின. அவனது குருநாதர் “வானுலகில் உள்ள கங்கை நீரை பூமிக்குக் கொண்டு வந்து சடங்குகள் செய்தால்தான் உன் முன்னோர்  சாபவிமோசனம் பெற்று முக்தியடைவார்கள். அப்போதுதான் உனது துன்பங்களும் நீங்கும்” எனக் கூறினார். பகீரதன் ஒற்றைக் கால்விரலை பூமியில் ஊன்றி நின்றவாறு கடுந்தவம் செய்தான். நம்மால் சில நிமிடங்கள் கூட செய்யமுடியாத இந்நிலையில் பல ஆண்டுகள் செய்த அவனது தவத்திற்கு மனம் இரங்கிய சிவபெருமான், வானுலகில் ‘மந்தாகினி’ என்ற பெயரில் பாய்ந்துகொண்டிருந்த கங்கையை பூமிக்கு இறங்குமாறு பணித்தார். ஆணவத்துடன் சிவனின் தலையில் பாய்ந்து வீழ்ந்த கங்கையின் கர்வத்தை அடக்க தமது சடையில் அடக்கினார். இதனால் பகீரதனின் எண்ணம் தடைப்பட்டது. மீண்டும் பரம்பொருளிடம் வேண்ட, தமது சடையினின்றும் ஒரு கீற்றாக கங்கையை வெளிப்படுத்தினார். பூமிக்கு வந்த கங்கை மீண்டும் ஆணவத்துடன் ஜன்ஹு எனும் முனிவரின் ஆசிரமத்தை சூழ்ந்து நாசப்படுத்தியது. அம்முனிவர் தமது தவவலிமையினால் சிறிது பருகியவுடனேயே அவரது வயிற்றில் கங்கை மறைந்தது. மீண்டும் பகீரதன் எண்ணம் தடைப்பட்டது. முனிவரிடம் சென்று தமது கஷ்டங்களைக் கூறினான். அவர் தமது காது வழியாக கங்கையை வெளியிட்டார். அதன் பிறகே கங்கை இமயமலையிலிருந்து ஆணவமில்லாமல் கீழே இறங்கி பகீரதனுக்கு புண்ணியம் அளித்தும் இன்றுவரை வற்றாத ஜீவநதியாக பாரதத்தில் ஓடிக்கொண்டும் இருக்கிறது. மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட இன்னல்களைத் தாண்டி வானுலக கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த பகீரதனின் விடாமுயற்சியே பகீரதப்பிரயத்தனமாயிற்று.

* மன அமைதிக்கு சொல்ல வேண்டிய ஸ்லோகம் என்ன? ஏ. ஆர். யமுனா, தூத்துக்குடி.

மன அமைதி மந்திரத்தால் மட்டும் கிடைப்பதல்ல. அமைதியின்மை ஏற்படக் காரணத்தைக் கண்டறிந்து அதை அவ்வப்போது அடக்கும் ஆற்றலைப்பெறுதலே சிறந்தது. அதாவது மன அமைதியைப் பாதிக்கும் எந்த விஷயமும் மனதிற்குள் புகவிடக்கூடாது. இதற்கான வலிமையைப் பெறுவதற்குத்தான் மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்கள்.

‘தந்தையும் தாயுமானான்’ எனத் துவங்கும் ‘திருச்செம்பொன்பள்ளி தேவார’த்தை நாளும் ஓதிவர மன அமைதி கிட்டும்.

* இறப்பு வீட்டுக்குப் போய் வந்தவுடன் திருமணத்திற்குச் செல்லலாமா? எம். பழனிச்சாமி மல்லிகா, பாபநாசம்.

கூடாது. மிக நெருங்கிய உறவானால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அன்றைக்கே சென்று வந்து மறுநாள் மற்ற நிகழ்வுக்கு சென்று விசாரிக்கலாம்.

* பூமிக்குள் புதைந்து கிடக்கும் சாமி சிலைக்கு சக்தி அதிகமாமே? ஏ. அண்ணாமலை, சுசீந்திரம்.

அப்படி கிடையாது. பல நாட்களாக பூஜையில்லாமல் இருப்பதால் மீண்டும் பிரதிஷ்டை செய்து பூஜித்தலே நலம். அதற்கு முன் அச்சிலையை அரசிடம் ஒப்படைத்து முன் அனுமதி பெறுதலும் அவசியம்.