இறைவழிபாடு!

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020

பரந்து விரிந்து இருக்கின்ற கதிரவனுடைய கதிர்களின் வெப்பத்தை ஒன்றுபடுத்தித் தன் கீழே சூரியகாந்த கண்ணாடி பாய்ச்சுகின்றது. பிற இடங்களில் இறைவனை வழிபடுவது வெயிலில் வேட்டியை வைப்பது போலாகும். திருக்கோயிலில் இறைவனை வழிபடுவது சூரியகாந்தக் கண்ணாடியின்கீழ் வைப்பது போலாகும். ஆதலால், திருக்கோயிலில் வழிபாடு இன்றியமையாததாகும்.

மாலற நேயம் மலிந்தவர் வேடமும்

ஆலயந் தானும் அரன்எனத் தொழுமே

என்பது சிவஞானபோதம்.

திருக்கோயில்களிலுள்ள திருவுருவங்கள் தேவர்களாலும் முனிவர்களாலும், நால்வர்கள் ஆழ்வார்கள் ஆகிய ஆன்றோராலும் நிறுவப்பெற்ற காரணத்தால், அவை மேன்மை பெற்று, வழிபடுவோருடைய வல்வினைகளை அகற்றி, வேண்டிய வரங்களை வழங்கி அருள்புரிகின்றன.

பசுவின் உடல் முழுவதும் பால் பரவியிருப்பினும், மடியின் மூலமாக அதனை பெறுவதுபோல், எங்கும் நிறைந்திருக்கின்ற இறைவனுடைய திருவருளை திருக்கோயில்களில் உள்ள திருவுருவங்கள் மூலமாக நாம் பெறுதல் வேண்டும்.

ஒரு பறவை இரு சிறகுகளை கொண்டு பறப்பது போல், இறை வழிபாட்டிற்கு பூவும் நீரும் வேண்டப்படுகின்றன.

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு

அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்

என்பது திருமந்திரம். எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாக கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.

அன்புடன் ஆசார பூசை செய்து

உய்ந்திட வீணாள் படாது அருள்                 புரிவாயே

என்று அருணகிரிநாத சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார்.

திருக்கயிலாய மலையில் பார்வதி பரமேஸ்வரர் மீது விளையாட்டாக வில்வக்கிளையை உதிர்த்த குரங்கு, அபுத்தி பூர்வமாக செய்த அச் சிவ புண்ணியத்தால் பூவுலகிற் பிறந்து, முசுகுந்த சக்கரவர்த்தி என்ற பெயருடன் மூவுலகும் ஆண்டது.

வில்வக் கிளையுதிர்த்த வெய்ய முசுக்கலையைச்

செல்வத் துரைமகனாய்ச் செய்தனையே

                – திருவருட்பா

இறைவழிபாடு செய்து, மார்க்கண்டேயர் மறலியை வென்ற வரலாறு, உலகம் அறிந்த ஒன்று.

ஆத்ம ஜோதியில் அருட்ஜோதி சூழ சிவஜோதி விளங்குகின்றது.

ஆத்மஜோதி – வட்டமாகிய கல்.

அருட்ஜோதி – சூழ்ந்திருக்கிற ஆவுடையார்.

சிவஜோதி – மேல் நோக்கிய லிங்கம்.

இதுதான் சிவலிங்கத்தின் உண்மை.

ஜோதியுள் ஜோதியுள் ஜோதி

என்பார் ராமலிங்க அடிகளார்.

– தொடரும்

– நன்றி : ‘வாரியார் வாக்கு’