ஜென்ம சரீரம் ஆவிக்குரிய சரீரம்!

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020

உலகத்தின் மக்களைப் போல வாழ்ந்து கொண்டிருந்த நம்மை, தேவன் இந்த உலகத்திலிருந்து, வேறு பிரித்து, தமக்கு சொந்த ஜனமாகத் தெரிந்துகொண்டதற்கு தேவனுக்கு ஓர் நோக்கம் உண்டு. அதாவது, பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களாகவும், குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்பே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டு, இயேசு கிறிஸ்து மூலமாய் தமக்கு சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். தேவனுடைய தீர்மானத்தின்படியே நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரராகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம் (எபே. 1:4,6,12).

தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட நம்மை இயேசு கிறிஸ்து, தம் சொந்த ரத்தத்தை சிந்தி, விலைக்கிரயமாய்க் கொடுத்து, சத்துருவாகிய சாத்தானின் கரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, அப்பா, பிதாவே, என்று கூப்பிடுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று, ஆவியானவர் தாமே, நம்முடைய ஆவியுடனே கூட சாட்சிக் கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை தம்முடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். எவர்களை முன்குறித்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ, அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார் (ரோமர் 8:29,30) என்று எழுதப்பட்டுள்ளது.

அதாவது, ஆதியிலே தேவன் மனிதனை தம்முடைய சாயலில் சிருஷ்டித்தார். அவனை தேவ சாயலாக சிருஷ்டித்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை ஊதினார். அவன் ஜீவாத்து மாவானான் (ஆதி. 1:27; 2:7). தேவன் மனிதனை தம்முடைய சாயலாக உருவாக்கினதன் நோக்கம், மனிதன் தன் கட்டளைகளுக்கெல்லாம் கீழ்ப்படிந்து, எப்போதும் தன்னோடு சஞ்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே. ஆனால் மனிதனோ, தேவன் விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததினால் சாபத்திற்குள்ளானான். “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியினால், பூமி உன்னிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்குத் திரும்புவாய் என்ற சாபம் மனிதனுக்கு உண்டாயிற்று

(ஆதி. 1:17- –19). தேவ சாயலால் உருவாக்கப்பட்ட மனிதன், தேவ திட்டத்திற்குக் கீழ்ப்படியாததனால், சாபத்திற்குள்ளானான். அவன் நிமித்தம் மரணம் உண்டாயிற்று. மனுஷகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு முதற்பலனானார்.

விதைக்கப்பட்ட ஓர் விதை செத்து, அதன்பின் அதனுள்ளிருந்து ஓர் புதிய செடி தோன்றி பலன் தருகிறதுபோல நம் ஜென்ம சரீரம் மரித்தபின் அடக்கம் பண்ணப்பட்டு, நமக்குள்ளிருந்து ஓர் ஆவிக்குரிய சரீரம் இயேசு கிறிஸ்துவின் வருகையின்போது உயிரோடு எழும்புகிறது

(1 தெச. 4:16,17). கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம் (1 கொரி. 15:5). நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே, பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். நம்முடைய அற்பமான சரீரத்தை தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார் (பிலி. 3:21). ஆகையால், அன்பு சகோதரிகளே, நம் சரீரங்களை பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதே புத்தியுள்ள ஆராதனை

(ரோமர் 12:2).

மோசம் போகாதிருங்கள். ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். நீங்கள் பாவம் செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாயிருங்கள்

(1 கொரி. 15:33,34).

“கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும், உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1 கொரி. 6:20).

– ஹெப்சிபா அற்புதராஜ்