காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அமல்

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2020 16:42

வாரணாசி,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் கருவறைக்குள் தரிசனத்திற்காக நுழையும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோவில் மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோவிலாகும்.

வாரணாசி என்று தற்போது அழைக்கப்பட்டாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டதனால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோவில் என அழைக்கப்படுகின்றது.

தற்போது இந்த கோவிலில் கருவறைக்குள் நுழைய பக்தர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

புதிய விதிப்படி, ஆண்கள் இந்து பாரம்பரிய உடையான வேட்டி-குர்தா மற்றும் பெண்கள் சேலை அணிய வேண்டும்.

மேலும் இந்த கோவிலுக்குள் நுழைய பக்தர்கள் காலை 11:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

இந்த முடிவை காசி வித்வத் பரிஷத் எடுத்துள்ளது. இந்த விதி கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும், 

மேலும் பேன்ட், சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்தவர்கள் தூரத்திலிருந்து தெய்வத்தை வணங்க முடியும். அவர்கள் கோவிலிக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனக் கூறப்பட்டு உள்ளது.

கோவில் அர்ச்சகர்களுக்கும் உடைகட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நெரிசலான நேரங்களில் அர்ச்சகர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த உடை மாற்றம் கொண்டுவரப்படுகிறது.

இந்த புதிய விதியை அமல்படுத்துவதற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், விரைவில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.