2 வயதுக் குழந்தையை ரயிலில் விட்டுச் சென்ற தாய்: தாயிடம் 1.5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் 40 வயது குழந்தை

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2020

மும்பை

புனே நகரத்தில் வசித்துவந்த 2 வயது ஆண் குழந்தையோடு மும்பை ரயிலில் புறப்படுகிறார் இளம் தாய் ஒருவர். சினிமா உலகில் சேர்வது அந்த இளம் தாயின் லட்சியம். மும்பை வந்து சேர்ந்ததும் ரயிலிலேயே இரண்டு வயது குழந்தையை விட்டுவிட்டு இறங்கி போய்விடுகிறார் தாய்.

தாயால் கைவிடப்பட்ட அந்த இரண்டு வயதுக் குழந்தை, இப்பொழுது 40 வயதுள்ள நடுவயது ஆணாக வளர்ந்துவிட்டார். 

ரயிலில் தன்னை விட்டு விட்டு தாய் இறங்கி சென்றதும், அதைத் தொடர்ந்து தான் பட்ட துயரங்களுக்கும் ஏற்பட்ட மன உளைச்சல்களுக்கும் இழப்பீடாக ரூ 1 .5கோடி வழங்க வேண்டுமென்று மகன் நஷ்ட ஈடு கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். மனு  நாளை விசாரணைக்கு வருகிறது.

இது ஒரு கற்பனை கதை அல்ல. அந்த 40 வயதுக்காரர் ஸ்ரீகாந்த் சப்னிஸ். பாலிவுட்டில் இப்பொழுது ஒப்பனைக் கலைஞராக உள்ளார்.

புனே நகரத்தில் தொடங்குகிறது ஸ்ரீகாந்த்தின்  கதை.

ஸ்ரீகாந்த் அம்மா பெயர் ஆர்த்தி. அவரது அப்பா பெயர் தீபக். புனே நகரத்தில் வசிக்கும் பொழுது 1979ல் ஸ்ரீகாந்த் பிறந்தார்.

புனே நகரத்து வாழ்க்கை ஆர்த்திக்கு அலுத்துப் போய்விட்டது. மும்பைக்குச் சென்று திரை உலக நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்பது அவரது ஆசை. 

ஸ்ரீகாந்துக்கு ரெண்டு வயது ஆகும் பொழுது 1981ம் ஆண்டு புனே நகரத்தை விட்டு பாலிவுட்டுக்கு புறப்பட்டார். கணவன், வீடு, சொத்துக்கள், சொந்தங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஸ்ரீகாந்தை மட்டும் கையில் தூக்கிக் கொண்டு  மும்பை செல்லும் ரயிலில் புறப்பட்டார்.

ரயில் மும்பை வந்தது. ஸ்ரீகாந்த் மீதான பாசமும் முடிவுக்கு வந்தது.

 குழந்தையை ரயில் பெட்டி இருக்கையில் விட்டுவிட்டு, தனியாக இறங்கி  ரயில் நிலையத்தை விட்டு ஆர்த்தி வெளியேறிவிட்டார்.

ரயிலை சோதனை செய்வதற்காக வந்த ரயில்வே அதிகாரி குழந்தையைக் கண்டார். குழந்தையை தூக்கிக்கொண்டு போய் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் குழந்தையை அனாதை நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஆர்த்தியின் அம்மா ஸ்ரீகாந்த் அனாதை நிலையத்தின் வளர்வதை எப்படி கண்டுபிடித்தார் என தெரியவில்லை. அது ஸ்ரீகாந்துக்கும் தெரியவில்லை. 

1986ஆம் ஆண்டு போலீசாரிடம் ஸ்ரீகாந்தின் பாட்டி மனுச் செய்தார். ஸ்ரீகாந்த் தன்னுடைய பேரன் தான் என்று நிரூபித்து அவரை வளர்ப்பதற்கான சட்டபூர்வ உரிமையுடன்  புனே நகருக்குத் திரும்பினார்.

பாட்டி வளர்த்து வந்த ஸ்ரீகாந்த், பின்னர் தாய்வழி அத்தை ஒருவர் வீட்டில் வளர வேண்டியதாயிற்று.

இதற்கிடையில் பாலிவுட்டில் தன் தாய் இருப்பது தெரியாமலேயே திரைப்பட ஒப்பனைக் கலைஞராக மும்பைக்கு வந்து சேர்ந்தார் ஸ்ரீகாந்த்.

2017 ஆம் ஆண்டு தன்னை பெற்றெடுத்த தாய் பாலிவுட்டில் தான் இருக்கிறார், அவர் பெயர் ஆர்த்தி என்று ஸ்ரீகாந்த் கண்டுபிடித்தார்.

ஆர்த்தியின் தொலைபேசி எண்ணை பெரும்பாடுபட்டு சேகரித்தார். அம்மாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஸ்ரீகாந்த் பேசினார்.

ஸ்ரீகாந்த் சொன்ன தகவல்களை ஆர்த்தி மறுக்கவே இல்லை. 

ஸ்ரீகாந்த்தை இரயிலில் விட்டுவிட்டு இறங்கியது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டார். 

2018ல் ஆர்த்தியின் வீட்டுக்கு செல்கிறார் ஸ்ரீகாந்த்.

ஆர்த்திக்கு இரண்டாவது கணவர் இருப்பதை கண்டுபிடித்தார். இரண்டாவது கணவர் பெயர் உதய் மஸ்கர்.  அவர்களுக்கு பல குழந்தைகளும் இருந்தனர்.

ஆர்த்தியும் மஸ்கரும் ஸ்ரீகாந்திடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தனர்,

 ஆர்த்தி - மஸ்கர் குழந்தைகளிடம் நான் உங்கள் அண்ணன் என்று ஸ்ரீகாந்த் சொல்லக்கூடாது என்பதுதான்  அந்த வேண்டுகோள் .

இந்த கோரிக்கை ஸ்ரீகாந்தை நிலைகுலையச் செய்துவிட்டது. 

ஆர்த்தி வீட்டிலிருந்து பெரும் துயரத்துடன் வெளியேறினார் ஸ்ரீகாந்த்.

தன்னை மகனாக ஆர்த்தி அறிவிக்க வேண்டும்.இதுவரை தான் பட்ட துயரங்களுக்கு இழப்பீடாக ஆர்த்தி மஸ்கர் தம்பதியினர் 1.5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் ஸ்ரீகாந்த்.

ஸ்ரீகாந்த் தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.


கட்டுரையாளர்: க.சந்தானம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation