பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 22–05–16

பதிவு செய்த நாள்

21
மே 2016
23:24

பார்த்தது!

பார்த்தும் படித்தும் பார்க்கிறேன்! ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’– இது ெயகாந்தன் எழுதிய நாவல்! இந்த நாவலை முதலில் அவர் ‘ அக்னி பிரவேசம்’ என்ற குறுநாவலாக ஆனந்த விகடனில் எழுதினார்.

பின்னர் அதே கங்கா கதாபாத்திரத்தை வைத்து ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று நாவலாக எழுதினார்! பொதுவாக நாவல் படிக்கும்போது ஏற்படுகிற சுவாரஸ்யம் படமாக பார்க்கும்போது இருப்பதில்லை! அதற்கு விதிவிலக்குத்தான் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படம்!

படித்ததும், பார்த்ததும் இந்த இரண்டும்  சுவையை கொடுத்ததற்குக் காரணம் இந்தப் படத்தின் எழுத்தாளர் ஜெயகாந்தனும், இயக்குநர் பீம்சிங்கும் கதையின் ஆழத்திற்குள் போயிருந்தார்கள். பொதுவாக நாவல் அல்லது  ஒரு சிறுகதை படமாகும்போது அது வெற்றி பெற்றதில்லை. சில விதிவிலக்குகள் உண்டு!

உமா சந்திரனின் நாவல்தான் ‘முள்ளும் மலரும்’ படமானது! சிவசங்கரியின் ‘47 நாட்கள்’ பாலசந்தர் இயக்கத்தில் வெற்றி அடைந்தது. சிவசங்கரியின்  ‘ஒரு சிங்கம் முயலாகிறது’ நாவல், ‘அவன் அவள் அது’என்ற பெயரில் வெளியானது! சிவகுமார், லட்சுமி, ஸ்ரீப்ரியா நடித்த இந்த படம், முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் வெற்றிகரமாக  ஓடியது. அதே போல் ஒரு சிறுகதை வெற்றியடைந்தது அனுராதா ரமணனின் ‘சிறை’ சிறுகதை!

இது ஆனந்த விகடன் பொன்விழா ஆண்டில் முதல் பரிசு 10,000 பரிசு பெற்ற சிறுகதை! இதை அப்படியே எடுத்திருந்தார் இயக்குநர் ஆர்.சி. சக்தி! லட்சுமியின் நடிப்பு இந்த படத்தில் அபாரமாக இருக்கும்! எனக்கு தெரிந்து இந்த படங்கள்தான் எழுத்திலிருந்து படமாகி வெற்றி பெற்ற படங்கள்.

என்னுடைய இந்த எண்ணத்தை எழுத்தாளர் சுஜாதாவும் உறுதி செய்கிறார். அவருடைய நாவல்கள் எதுவுமே பெரிய வெற்றி அடையவில்லை. அவருடைய  ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘காயத்ரி’! இது தினமணி கதிரில் வெளியானது! இதை படமாக எடுத்த போது அந்த படத்தின் கதாநாயகன் ஜெய்சங்கர், வில்லன் ரஜினிகாந்த்!

அடுத்து அவருடைய ‘அனிதா இளம் மனைவி’ நாவல் குமுதம் வார இதழில் வெளியானது! இதை பஞ்சு அருணாசலம் ‘இது எப்படி இருக்கு?’ என்ற பெயரில் எடுத்தார். படம் தேறவில்லை. தி. ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவலும் படமானது! இதை ‘பாரதி’ படத்தை இயக்கிய ஞான ராஜசேகரன்தான் இயக்கியிருந்தார்.

நாவல் ஏற்படுத்திய பாதிப்பை  ‘மோகமுள்’ படம் ஏற்படுத்தவில்லை! சுஜாதாவின் ‘ஜன்னல் மலர்’ ‘காகிதச் சங்கலிகள்’ ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ போன்ற நாவல்கள் படங்களாகின! ஆனால் எதுவுமே போணியாகவில்லை.

இத்தனைக்கும் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ படத்தில் மனோரமாவின் நடிப்பு அபாரமாக இருக்கும்! பொதுவாக, எழுத்தாக வந்ததை யாரும் ஒழுங்காக படமாக எடுப்பதில்லை.

எர்னஸ்ட் ஹெமிங்க்வேயின் ‘FAREWELL TO ARMS’, ‘FOR WHOM THE BELL TOLLS’  இரண்டுமே படமாக வந்தன.

அதன் திரைவடிவத்தைப் பற்றி அவரிடம் கேட்டார்கள்! ‘டேக் தி மணி அண்ட் ரன்’ அதாவது பணத்தை வாங்கிக்கொண்டு ஓடிப்போ,  எது எப்படியிருந்தா உனக்கென்ன என்பதுதான் அவருடைய எண்ணமாக இருந்தது!

சத்யஜித் ரே இயக்கிய முதல் படம் ‘பதேர் பாஞ்சாலி.’ இதை எழுதியவர் பூஷன் பட்டாச்சார்யா! படத்தை பார்த்துவிட்டு ‘இது நான் எழுதியதே இல்லை’ என்றாராம். ரவீந்திரநாத் தாகூரின் ‘தீன்கன்யா’வை சத்யஜித் ரே படமாக எடுத்தார்.

எழுத்திற்கும் படத்திற்கும் தொடர்பே இருக்காது. டாபனி டுமாரியரின் சிறுகதைதான் ‘birds.’ ஆல்பிரட் ஹிட்ச்காக் இதை படமாக எடுத்தார். பறவைகள் மனிதர்களை தாக்குகிறது என்கிற கருவை மட்டும் எடுத்துக்கொண்டு அவர் புதிதாக ஒரு கதை பண்ணினார்.

ஆனால் ரோமான் போலன்ஸ்கி ஐரா லெவின், தாமஸ் ஹார்டியின் நாவல்களை சிறந்த படங்களாக எடுத்திருக்கிறார்கள். இப்போது நிறைய படங்களை பார்க்கிறேன்! இப்போது பார்ப்பவர்களின் ரசனைகள் நிறைய மாறிவிட்டன!

‘பாகுபலி’ போன்ற படங்கள் ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. ‘பிட்சா’ போன்ற படங்களை பார்த்தபிறகு மறுபடியும் நம் திரைப்பட எழுத்தாளர்கள் நாவல்கள் பக்கம் போகலாம்!இன்னும் இர்விக் வாலஸ்,ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், ஆர்தர் ஹெய்லி நாவல்களின் நிறைய சினிமா மசாலாக்கள் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

படித்தது!

கல்கி வார இதழின் பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ்!

இவர் சாகித்ய அகாடமிக்காக எழுதியுள்ள  புத்தகம்தான் ‘ராஜாஜி’! தமிழ்நாட்டு அரசியல் பல நல்ல தமிழையும், பல தமிழ் எழுத்துலக மேதைகளையும் பக்தி, பிறப்பு இரண்டு காரணங்களை காட்டி புறக்கணித்திருக்கிறது.

அதில் அழிந்து போனது நல்ல தமிழ்! உதாரணங்கள் நாலாயிர திவ்யபிரபந்தம், மகாகவி பாரதி! அந்த வரிசையில் சேர்க்கப்படவேண்டியவர் ராஜாஜி!

அவரை புரிந்து கொள்ள இன்னும் ஒரு யுகம் தேவைப்படும் என்றே தோன்றுகிறது. இந்த நேரத்தில் ராஜாஜி பற்றிய ஓர் அருமையான நூலை மிகுந்த சிரமத்திற்கு நடுவே எழுதியிருக்கிறார் வெங்கடேஷ் என்று புத்தகத்தை படித்தபோது புரிந்து கொண்டேன்.

ராஜாஜியை புரிந்து கொள்ளுதல், சிறுவர்களுக்கு ராஜாஜி, ராஜாஜியின் விளக்கவுரை/நயவுரை, இரு கற்பகக் கனிகள், ராஜாஜி சிறுகதைகள், ராஜாஜி கட்டுரைகள், தலையங்கங்கள், உரைகள், ராஜாஜியின் கவிதை, பாடல்கள், நாடகம், ராஜாஜியின் மொழிச் சிந்தனைகள், இதழாளர் ராஜாஜி, ராஜாஜியின் மொழியாக்கங்கள், ஆற்றலாக மாறிய தனிமை, வேதாந்தச் சிமிழ், இலக்கிய உறவுகள், ராஜாஜியும் சாகித்ய அகாடமியும், ராஜாஜி வாழ்க்கைச் சுருக்கம்  என்று 15 அத்தியாயங்களாக பிரித்துக்கொண்டு ராஜாஜியை அலசியிருக்கிறார் ஆசிரியர்.

ராஜாஜி அரசியலில் எத்தனையோ பதவிகளை வகித்திருக்கலாம். ஆனால், எங்கள் தலைமுறைக்கு குழந்தை பருவத்தில் எங்களுக்கு ராமாயண, மகாபாரத இதிகாசங்களை சொன்ன ஆசான் அவர்தான்!

சமுதாய சீர்திருத்தவாதி, தூய்மையான அரசியல்வாதி, பவுராணிகர், நயவுரை நாயகர், பத்திரிகையாளர், சிறுவர் எழுத்தாளர், இப்படி ராஜாஜியின் பல்வேறு பரிமாணங்களை கண்டு பிரமித்திருக்கிறார் எழுத்தாளர். நிச்சயம் ராஜாஜி ஒரு பிரமிக்கத்தக்க மேதைதான்! அவரில்லையென்றால் குழந்தைகளுக்கு அந்த நாட்களில் யார் இதிகாசங்களை சொல்லியிருப்பர்கள்?

ராஜாஜியைக் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உதவுகிறது முதல் அத்தியாயம்!

தலைப்பு: ராஜாஜியை புரிந்து கொள்ளுதல்!

புதிய முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார். அவரைக் காணச் சென்றார் ஓர் உயர் அதிகாரி. நேற்று வரை அவரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கவும் கூட உத்தரவிட அதிகாரம் பெற்றவர், அந்தப் போலீஸ் உயரதிகாரி.  இன்று அந்த மனிதரே சென்னை மாகாணப்  பிரதமராக (மாநில முதல்வருக்கு  அன்று வழங்கப்பட்ட பெயர்) உட்கார்ந்திருக்கிறார். கோட்டும், சூட்டும் போட்டுக்கொண்டு அவர் முன் போய் நின்றார்  அந்த அதிகாரி.  வழக்கமாக இப்படி நின்றவர் இல்லை.  பிரிட்டிஷ் அதிகாரம் கோலோச்சிய 1937ம் ஆண்டு அது.

நிமிர்ந்து பார்த்தார் அந்த கறுப்புக் கண்ணாடி மனிதர். முகத்தில் என்னவிதமான உணர்ச்சி வெளிப்படுகிறது என்பதை ஊகிக்க முடியாத முகம் அது! மென்மையாகப் பேசினார். ‘நான் பார்க்க விரும்பியது சர். சார்லஸ் கன்னிங்ஹாமை அல்ல! இன்ஸ்பெக்டர்- ஜெனரலைத்தான் நான் பார்க்க விரும்பினேன்.’

ஒரு கணம்தான் – மாகாணப் பிரதமரின் எண்ணம் என்ன என்பதை அந்த மனிதர் புரிந்து கொண்டார். விரைவில் வெளியேறி அரை மணிக்குள்ளாகத் தமது காவல் துறை சீருடையில் வந்து பிரதமர் முன் நின்றார் அவர். அதன் பின்னரே மாகாணப் பிரதமர் அவருடன் அலுவல் விஷயங்களை பேச ஆரம்பித்தார்.

 அந்த மாகாணப் பிரதமர்  ‘ராஜாஜி’ என்றும், ‘சிஆர்’ என்றும், ‘ஆச்சாரியார்’ என்றும் அழைக்கப்பட்ட சி. ராஜகோபாலாச்சாரியார்.

 128 பக்கங்களுக்குள் ராஜாஜியின் இத்தனை பரிமாணங்களையும் தொகுத்து வெளியிட்டிருப்பதுதான் இந்த எழுத்தாளரின் சாதுரியம், இந்த புத்தகத்தின் சிறப்பு!

‘கண்ணன்’ என்ற குழந்தைப் பத்திரிகைக்கு ‘பூசனிக்கொடி’ கதையை எழுதியதும், ஒன்றன்பின் ஒன்றாக இந்த கற்பனை உபதேசக் கதைகள் தோன்றின’ என்று ராஜாஜி ‘கற்பனைக் காடு’ என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

என்னைக் கேட்டால் ராஜாஜியின் இந்த நூலை பாடநூலாக அறிமுகப்படுத்தினால், அது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல படிவங்களில் தங்களை தயார்படுத்திக்கொள்ள உதவும்.

ரசித்தது!

டால்ஸ்டாயின் பொன்மொழிகள்!

ஆண்--–பெண்

 ஒரு ஆண் தன்னைப் பற்றி ஒரு பெண் தெரிந்து கொள்ளக்கூடாத அளவிற்குக் கூட அதிகமான விஷயங்ளை அவளிடம் சில சந்தர்ப்பங்களில் சொல்லி விடுகிறான். அதன் பிறகு அவற்றைப் பற்றி அவளிடம் சொன்னதையே அவன் அடியோடு மறந்துவிடுகிறான். அனால் அந்த பெண்ணோ அவற்றை ஞாபகம் வைத்துக்கொண்டேயி ருக்கிறாள்.

இன்பம்: மனிதனுடைய குழந்தைப் பருவம்.

உண்மை: எப்போதும் தன்னை உணரச் செய்வது!

உலகம்: நாணயமானவனை மக்கள் மதிப்பதில்லை;  புறக்கணிக்கின்றனர். ஆனால் வேஷதாரிகளை வாழ்த்தி பாராட்டுகின்றனர். இதுதான் உலகம்.

* * *