மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகின்றனர்: அசோக் கெலாட்

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2020

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில் பாரதிய ஜனதா தலைமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார். டிசம்பர் 22ம் தேதி ஜெய்ப்பூரில் தேசிய குடியிரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக 3 லட்சம் பேர் பங்கேற்ற பிராண்டமான பேரணியை நடத்தினார். ராஜ்யசபாவில் தேசிய குடியுரிமை சட்ட திருத்த விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்கு இடம் பெயர்ந்த, குறிப்பாக  இந்து, சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அசோக் கிலாட் கேட்டதாக கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக அசோக் கெலாட், அமித்ஷா தவறான தகவல்களை கூறுகின்றார். தான் அப்படி கூறிய நேரத்தில், இந்த இரண்டு மதங்களை சார்ந்தவர்கள் மட்டுமே இடம் பெயர்ந்து (ராஜஸ்தானில்) இருந்தனர். மற்ற மதத்தவர்களும் இடம் பெயர்ந்து இருந்தால், அவர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கூறியிருப்பேன் என்று விளக்கமளித்தார்.  

சென்ற டிசம்பர் 16ம் தேதியுடன் ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் பதவி வகிப்பது 11 வருடங்கள் நிறைவு பெறுகிறது. (1998 முதல் 2003 வரை ஐந்து வருடங்கள். 2008 முதல் 2013 வரை ஐந்து வருடங்கள். தற்போது 2008 முதல்…) அசோக் கெலாட் தொடர்ந்து மக்கள் நலனில் கவனம் செலுத்துகின்றார். மாநில நிர்வாகத்தை தன் பிடியில் வைத்துள்ளார். டிசம்பர் மாதம் மக்கள் நல திட்டங்கள் தொடர்பாக தனது உத்தரவை அமல்படுத்தாத ஒன்பது இளநிலை அதி காரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்தார். இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். டிசம்பர் 10ம் தேதி மக்கள் நல திட்ட உதவிகளை அமல்படுத்த தடையாக இருக்கும் அதிகாரிகள் பற்றி தகவல் தெரிவிப்பவர்கள் பழிவாங்கப்படாமல் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அசோக் கெலாட் அரசு நீரிழிவு, உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த ‘நிரோகி ராஜஸ்தான்’ என்ற விழிப்புணர்ச்சி பிரசாரத்தை தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவராக உள்ள அசோக் கெலாட், கட்சி தலைமைக்கு முக்கிய மானவராக இருக்கின்றார். ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தல்களி லும், உள்ளாட்சி தேர்தல்களிலும் கட்சியை வெற்றி பெறவைத்துள்ளார். அவர் இந்தியா டுடே நிருபர் ரோகித் பரிகாருக்கு அளித்த பேட்டி.

கேள்வி: நீங்கள் சமீபத்தில் பாரதிய ஜனதாவின் தலைமையை தாக்குகின்றீர்கள். முன்பு இது போல் தாக்குதவதை தவிர்த்து வந்தீர்கள். தற்போது தாக்குவதற்கு என்ன காரணம்?

பதில்: நீங்கள் அமித்ஷா,நரேந்திர மோடி தலைமை பதவியில் இருக்கும் போது கேட்கின்றீர்கள். தற்போது மக்களிடையே அச்சம், மிரட்டி பணம் பறித்தல், ஊழல், மதரீதியாக மக்களை பிளவுபடுத்துவது போன்றவை முன் எப்போதும் இல்லாத அளவு உள்ளது. நான் மட்டுமல்ல, இவற்றை எல்லோருமே எதிர்க்கின்றனர்.

கேள்வி: நீங்கள் ஏன் ஜெய்ப்பூரில் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பேரணி நடத்தீனீர்கள்?

பதில்: தேசிய குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்த முடியாதவை. இவற்றில் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையான முடிவு எடுத்துள்ளனர். அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 16 லட்சம் இந்துக்கள் இடம் பெறவில்லை. இதில் முஸ்லீம்கள் மட்டும் தனிமைப்படுத்தப்படவில்லை. அமித்ஷா இந்தியாவை ‘இந்து ராஜ்ஜியம்’ ஆக்கபோவதாக மக்கள் மத்தியில் அச்ச மூட்டுகின்றார். ஆனால் தமிழ்நாட்டு இந்துக்களின் எதிர்பார்ப்பு, ராஜஸ்தான் இந்துக்களிடம் இருந்து வேறுபட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள் கொதித்துப் போயுள்ளனர். அமைதியை நிலைநாட்ட மற்ற முதலமைச்சர்களும் இது போல் பேரணிகளை நடத்த வேண்டும்.

கேள்வி: நீங்கள் ஏன் தேர்தல் நிதி பத்திரத்தை பற்றி பிரச்னையை கிளப்புகின்றீர்கள். சுப்ரீம் கோர்ட் நீதிபதி, இது பற்றி தன்னிச்சையாக விசாரிக்க வேண்டும் என்கின்றீர்கள்?

பதில்: அரசியலில் ஊழல் நடைபெறுவதற்கு தேர்தல் நிதி பத்திரம் மூலகாரணமாக அமையும். தேர்தல் செலவை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றேன்.

கேள்வி: உங்கள் மாநிலத்தில் ஊழலை எவ்வாறு ஒழிக்கின்றீர்கள்?

பதில்: நான் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மத்தியில் கூட்டத்தை நடத்தி, ஊழல் செய்பவர்களை தப்ப விடாதீர்கள். ஊழலை அம்பலப்படுத்து பவர்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள் என்று கூறியுள்ளேன். போதை மருந்து கடத்துபவர்கள், சட்ட விரோதமாக கனிமங்களை எடுப்பவர்கள், உணவில் கலப்படம் செய்பவர்கள் ஆகியோரை தொடர்ந்து கண்காணிக்குமாறு கூறியுள்ளேன். இத்தகைய குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.

கேள்வி: ராஜஸ்தான் சுற்றுலா துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதுள்ளது. ஆனால் நீங்கள் மதுவுக்கு எதிராக உள்ளீர்கள்…. இதனால் பாதிப்பு ஏற்படாதா?

பதில்: ஆம். நான் மதுவுக்கு எதிரான வன்தான். மதுவுக்கு தடை செய்வது ராஜஸ்தான் அல்லது ஹரியானா, குஜராத்தில் மட்டும் அமல்படுத்துவது காரிய சாத்தியமற்றது. இதை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த வேண்டும். எப்படியிருப்பினும் மதுவுக்கு தடை விதிப்பது சுற்றுலா துறையை பாதிக்காது.. நாங்கள் அதிக அளவு சுற்றுலா பயணிகளை கவருவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.

கேள்வி: கடந்த ஒரு வருட ஆட்சியில் உங்கள் சாதனை என்ன?

பதில்: எங்கள் தேர்தல் அறிக்கையே, எங்களது வேலை திட்டம். தேர்தல் அறிக்கையில் கூறியதில் கால் பங்கு நிறை வேற்றியுள்ளோம். பார்மர் கச்சா எண்ணை சுத்திகரிப்பு ஆலை பணியை முடுக்கிவிட முயற்சி செய்துள்ளேன். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு நிதி திரட்டுவதற்கும் முயற்சி செய்கின்றேன். நான் முன்பு அறிமுகப் படுத்திய இலவச மருந்து, இலவச பரிசோதனை போன்ற திட்டங்களை பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளேன்.

கேள்வி: கோடாவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்து இருப்பது அவகாரமானதாக இல்லையா?

பதில்: ராஜஸ்தானில் பச்சிளம் குழந்தைகள் மரணமடைவது அதிகமாக உள்ளது. இதனால் தான் மருத்துவமனைகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், வருடத்திற்கு ஆயிரக்கணக்கான  பச்சிளம் குழந்தைகள் பலியாகின்றனர். மற்ற மருத்துவமனைகளிலும் இதே நிலைதான். நான் நோய் இல்லாத ராஜஸ்தானை உருவாக்கும் கொள்கையை வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். எந்த அரசும் இதுவரை செய்யாத திட்டம். மக்கள் மருத்துவமனைகளை நாடாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

கேள்வி: இது நோய் வரும் முன் காக்கும் திட்டமா?

பதில்: ஆம். இதில் மருத்துவர்கள், நர்ஸ், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் ஈடுபடுவார்கள், இவர்கள் ஆரம்பத்திலேயே நோய் பற்றி மூத்த மருத்துவர்களுடன் ஆலோசித்து சிகிச்சை அளிப்பார்கள். உதாரணமாக ஆரம்பத்திலேயே கண்டு பிடித்தால் நீரிழிவு, உடல்பருமன் போன்ற வற்றை தடுக்கலாம். இதே போல் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பதை உணர்த்த வேண்டும். இதன் மூலம் மாநிலம் சமூக தரவுகளில் முன்னேற்றம் அடையும்.

கேள்வி: மற்ற நல திட்டங்கள் என்ன?

பதில்: நாங்கள் வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள், முதியோருக்கு உதவி களை வழங்கியுள்ளோம். ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களுக்கு ஆட்களை நியமித்துள்ளோம்.

கேள்வி: மற்ற எந்த பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?

பதில்: தீண்டாமை. துரதிஷ்டவசமாக தீண்டாமை இன்றும் நீடிக்கின்றது. அடுத்து அதிகரித்து வரும் மக்கள் தொகை. மக்கள் தொகை அதிகரிப்பால் அமல்படுத்தும் எல்லா திட்டங்களுக்கும் உரிய பலன் கிடைக்காமல் போகிறது.

கேள்வி: விவசாய கடன் தள்ளுபடியால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதா?

பதில்: அவ்வளவாக இல்லை. எங்களால் எந்த அளவு முடியுமோ, அந்த அளவு கடன் தள்ளுபடி செய்துள்ளோம். இதே போல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையும், தொழில் அதிபர்களுக்கு ஒரே தவணையில் கடன் நிவாரணம் வழங்குவது போல், விவசாயிகளுக்கும் வழங்க கேட்டுக் கொண்டுள்ளோம். எங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி வராததே, பெரும் பிரச்னையாக உள்ளது. ஜி.எஸ்.டி வரியில் மாநிலத்திற்கு மத்திய அரசிடம் இருந்து 11 ஆயிரம் கோடி வரவேண்டியதுள்ளது. முந்தைய அரசு ரூ.12 ஆயிரம் கோடி கடன் வைத்துள்ளது.

கேள்வி: உங்கள் அரசியல் எதிரியான வசுந்தரா ராஜே பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: எனக்கு பழிவாங்கும் எண்ணம் இல்லை. நான் தவறு செய்ததை பற்றி மட்டும் எதிர்கின்றேன். நியாயமான நிர்வாக தவறுகளை அல்ல.

கேள்வி: நீங்கள் நேரு–இந்திரா காந்தி குடும்பத்திற்கு விசுவாசமாக இருப்பதால், முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்களா?

பதில்: நான் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். இது சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளிலும், உள்ளாட்சி தேர்தல் முடிவுகளிலும் தெளிவாகியுள்ளது.

கேள்வி: உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சச்சின் பைலட் உடன் பிரச்னை உள்ளதா?

பதில்: நான் இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், அவரை அமைச்சராக்க வேண்டும் என்று கூறினேன். அப்படி இருக்கும் போது, அவருக்கு எதிராக நான் இருப்பதாக எப்படி கூறுகின்றார். இந்த காலத்து இளைஞர்களுக்கு பொறுமை இல்லை. எனக்கு சமமாக உள்ள குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் நாற்பது வருட கடின உழைப்பிற்கு பிறகு, இந்த இடத்தை எட்டியுள்ளனர். நான்கே வருடங்களில் உயர்ந்த பதவிக்கு போக வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க கூடாது. இளம் தலைவர்கள் உடனே தலைமைப்பதவிக்கு உயர வேண்டும் என்று கருதுகின்றனர். இது அவர்களின் விருப்பமாக இருந்தாலும், அவ்வாறு நடக்காது.

நன்றி: இந்தியாடுடே வார இதழ்