ராணுவத்தை பலப்படுத்தும் சீனா

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2020

சீனாவிற்கு சென்ற வருடம் முக்கியமான வருடம் என்பதில் சந்தேகம் இல்லை.மக்கள் சீன குடியரசு அமைக்கப்பட்டதன் 70வது ஆண்டு விழாவை கொண்டாடியது. 1949ம் ஆண்டு தியனன்மென் சதுக்கத்திலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து அப்போதைய சீன அதிபர் மாசே துங், “சீனா எழுச்சி பெறுகிறது” என்று அறிவித்தார். 70 வருடங்களுக்கு பிறகு அதே மேடையில் இருந்து தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங், அதே உற்சாகத்தோடு “சீனாவை யாரும் அசைக்க முடியாது. சீனா அல்லது சீன மக்கள் முன்னேறிச் செல்வதை தடுக்க முடியாது” என்று கூறினார். அன்று நடந்த ராணுவ அணிவகுப்பில் பல நவீன போர்தள வாடங்களும், ஆயுதங்களும் இடம் பெற்றன.

சீனாவில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான ‘குளோபல் டைம்ஸ்’, டிசம்பர் 29ம் தேதி சீனாவின் நவீன ஆயுதங்களை பட்டியலிட்டு இருந்தது. 2019ம் வருடம் சீனாவின் ராணுவ பலத்தை பறைசாற்றும் ஆண்டு. நிலம், நீர், ஆகாயம் ஆகியவற்றில் இயங்கும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை வெளியுலகிற்கு காண்பித்துள்ளது. சீனா நவீன ஆயுதங்களை மட்டும் தயாரிக்கவில்லை. ஆயுத தயாரிப்பில் சீனா உறுதியாக முன்னேறுகிறது. நவீன ஆயுத தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. சீனா தன்னிடம் உள்ள ஆயுதங்களை வெளியுலகத்திற்கு காண்பித்தன் மூலம் வெளிப்படை தன்மையாக உள்ளது. அத்துடன் சீனா அமைதியை நிலைநாட்டவும், தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் தயாராக உள்ளது என எடுத்துக் காட்டியுள்ளது என்று, அந்த நாழிதழ் குறிப்பிட்டு இருந்தது. சீனாவின் ஆயுதங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியா பின்தங்கியே உள்ளது.  

சமீபத்தில் சீனா லியோனிங் மாநிலத்தில் உள்ள டேலியன் துறைமுகத்தில் எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் 0520 ரக 23வது கப்பலையும், 055 ரக தாக்கி அழிக்கும் கப்பலின் ஆறாவது கப்பலையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது. “இந்த கப்பல்கள் உலக அளவில் பெரிய, அதிக தாக்கும் திறன் கொண்ட கப்பல்கள் என்றும், விமானப்படைக்கு  தூணாக அமையும் என்று நிபுணர்கள் கூறுவதாக குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

சில நாட்களுக்கு முன் சீனா உள்நாட்டில் தயாரித்த சான்டாங் என்று பெயரிட்டுள்ள விமானம் தாங்கி கப்பலை அறிமுகப்படுத்தியது. இது பற்றி சி.என்.என் செய்தி நிறுவனம், “சீனா அதிகாரபூர்வமாக உள்நாட்டில் தயாரித்த சாங்டாங் விமானம் தாங்கி கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உலக தரம் வாய்ந்த கப்பற் படையை அமைக்க வேண்டும் என்பதன் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” என்று கூறியிருந்தது. இந்த விமானம் தாங்கி கப்பல், கப்பற்படையில் இணையும் விழா ஹைனன் மாநிலத்தில் நடைபெற்றது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றார். 2019ம் ஆண்டில் சீனா கப்பற்படையில் அதிக எண்ணிக்கையிலான போர் கப்பல்களை இணைத்துள்ளது. எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஒன்பது கப்பல்கள், ஒரு சரக்கு விநியோக கப்பல், ஒரு விமானம் தாங்கி கப்பல், ஒரு நீருக்கடியில் தாக்கும் கப்பல், 12 இலகுரக கப்பல் ஆகியவைகளை இணைத்துள்ளது.

சீனா ராணுவ தளவாடங்களை படையில் இணைத்துள்ள துடன், அடுத்து வரும் வருடங்களில் அதிக தளவாடம், ஆயுதங்களை சேர்க்கும் என்று ராணுவ நிபுணர்கள் கூறியதாக குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது. பெய்ஜிங்கில் அக்டோபர் 28ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் நான்காவது கூட்டம் நடைபெற்றது. அதில் அதிபர் ஜி ஜின்பிங் சமர்ப்பித்த அறிக்கையை பற்றி கமிட்டி உறுப்பினர்கள் விவாதித்தனர். “ சீனாவிற்கு ஏற்ற மாதிரி சோசலிஷ அமைப்பை தொடர்வதுடன் மேம்படுத்தவும் வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் கட்சியின் திறனை மேம்படுத்த வேண்டும். அரசு சட்டப்படி அதிகாரத்தை செலுத்த வேண்டும்” என்று கூறப்பட்டது.

சீனாவின் வளர்ச்சிக்கு ஏற்றமாதிரி இந்தியாவும் தயாராக வேண்டும். முதலில் நாம் இந்தியா எதை செய்ய கூடாது என்பதை பற்றி பார்ப்போம். அக்டோபர் மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மாமல்லப்பரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது உறவை மேம்படுத்துவது பற்றி பேசினார்கள். இதனால் ஏதாவது நன்மை உண்டா?

நேரு காலத்தில் இருந்தே இதே கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கிறது. 1950களில் இருந்தே இந்திய தலைவர்கள் சமாதான சகவாழ்வு என்பது போன்று கனவு கண்டு வருகின்றனர். ஆனால் சீனா திபேத்திய பீடபூமியில் தன்னை பலப்படுத்திக் கொண்டு, இந்தியாவுடன் போர் தொடுப்பதறாகான தயாரிப்பில் ஈடுபட்டது. இனிமேலாவது இந்தியா தெளிவற்ற லட்சியங்களை கைவிட்டு, தனது நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இந்திய தலைவர்கள் சீன தலைவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

சீன தலைவர்கள் எப்போதும் நடை முறைக்கு ஏற்றதையே கடைப்பிடிக்கின்றனர். துரதிஷ்டவசமாக இந்தியா தற்போதைய நிலையை பற்றி பேசுவதை தவிர்க்கவே, கடந்த காலத்தை பற்றி பேசுகிறது. இதே போல் மாமல்லபுரத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் நடந்திருக்கலாம். இரண்டு தலைவர்களும் தனியாக இரண்டரை மணி நேரம் விருந்தில் சந்தித்து பேசிய போது என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம்.

இந்த சந்திப்பில் பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், வர்த்தக பற்றாக்குறைய குறைக்கவும் பேச்சு வார்த்தை நடத்த உயர்மட்ட குழு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சீனாவுடனான வர்த்தகத்தில் இந்தியாவுக்கு வர்த்தக பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. (சீனாவிடம் இருந்து இந்தியா அதிக அளவு இறக்குமதி செய்கிறது. ஏற்றுமதி குறைவாக உள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை இந்தியாவுக்கு அதிக அளவு உள்ளது.) இனி வருங்காலத்தில் வர்த்தக பற்றாக்குறை குறைய உதவியாக இருக்கும்.

சீனாவுக்கு எல்லா வகையிலும் ஈடுகொடுக்க வேண்டும் எனில், இந்தியா தொடர்ந்து உள்கட்டமைப்பு மேம்பாடு, சாலைகள், விமான நிலையங்கள், தொலை தொடர்பு அமைப்பு ஆகியவைகளை மேம்படுத்த முதலீடு செய்ய வேண்டும். எல்லை புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது பின்தங்கி இருக்காமல், இந்தியா சுயமாக நவீன தொழில்நுட்பங்களையும், தொலை தொடர்பு அமைப்புகளையும், செயற்கை நுன்னறிவு ஆகியவற்றை உருவாக்க வேண்டும். அப்போதுதான் சீனா, இந்தியாவுக்கு உரிய மதிப்பளிக்கும். 1962ல் போர் தொடுத்த மாதிரி போர் தொடுக்க முயற்சிக்காது.

நன்றி: டெய்லி பயோனியர் இணையதளத்தில் கிளாட் ஆர்பி எழுதிய கட்டுரையின் சுருக்கம். (இவர் இந்திய–சீன உறவுகள் குறித்த நிபுணர்.)