அரசியல் மேடை: உள்ளாட்சித் தேர்தல் : ‘வளர்பிறை’யார்?

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2020

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வைத்து அதிமுக – திமுகவினரிடையே ஒரு விநோதமான விவாதம் நடைபெற்று வருகிறது. இது நடைபெற்று முடிந்த சட்டசபைக் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. 2016–ம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல், 27 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தலாக இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30–ம் தேதிகளில் நடைபெற்ற இந்த தேர்லில் கட்சி சார்பாக 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 5090 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சிகளில் திமுக அணி 272 இடங்களையும், அதிமுக அணி 240 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

27 மாவட்டங்களில் தலா 13 மாவட்டத் தலைவர் பதவிகளை அதிமுக, திமுக பெறுவதற்கு வாய்ப்புள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் இரண்டு கட்சிகளும் தலா 8 இடங்களை கைப்பற்றி இருப்பதால், அங்கே தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இழுபறி இருக்கும். யார் கை ஓங்குகிறதோ அவர்கள் வசம் தலைவர் பதவி வரும்.

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையோடும் நடந்ததால் தான் திமுக அதிக இடங்களை  கைப்பற்ற முடிந்தது எனக் கூறும் அதிமுக தலைவர்கள், இந்த தேர்தலில் தங்களின் செல்வாக்கை நிலைநாட்டி இருப்பதாக கூறியுள்ளனர்.

கடந்த 2006–ம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது உள்ளாட்சித் தேர்தல் வன்முறை மற்றும் விதிமீறலின் உச்சமாக இருந்ததாக கூறும் அதிமுகவினர், அதிலிருந்து முற்றாக விலகி நின்று மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் தலையிடாமல் சுதந்திரமாக இந்த தேர்தலை நடத்த அரசாங்கம் ஒத்துழைப்பு நல்கியதாக கூறுகின்றனர்.

தேர்தலின்போது முறைகேடுகள் இல்லையென்றாலும், வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு சில இடங்களில் தவறுகள், குளறுபடிகள், அத்து மீறல்கள், அதிகார துஷ்பிர யோகம் நடைபெற்றதாக திமுக தரப்பு குற்றம் சுமத்துகிறது. ஆனாலும் திமுக இதில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது என்று கூறும் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களின் ஆதரவு எங்களுக்கே என மார்தட்டுகிறார்.

இந்நிலையில், திமுக  கடந்த 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஒவ்வொரு திமுக வேட்பாளரும், 3 லட்சம், 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்து நடைபெற்ற வேலூர் தொகுதி தேர்தலில் வெறும் எட்டாயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதே போல, நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் திமுக வசம் இருந்த தொகுதிகளில் 30 ஆயிரம் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது. இதை சுட்டிக்காட்டிப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களை அதிமுக கைப்பற்றி இருப்பதால் இது எங்களுக்கு வளர்பிறை, திமுகவுக்கு தேய்பிறை என்று கூறினார்.  இது குறித்து சட்டசபையிலும் விவாதம் நடைபெற்றது. அங்கு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சில புள்ளி விவரங்களை தெரிவித்து யாருக்கு வளர்பிறை என்ற கேள்வியை எழுப்பினார்?

‘‘கடந்த  முறை டில்லி பார்லிமெண்டில் திமுக.வுக்கு ஒரு இடம் கூட இல்லை. இப்போது 24 எம்.பி.க்கள் உள்ளனர். கடந்த ஓராண்டு முன்பு வரை சட்டமன்றத்தில் திமுகவுக்கு 89 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறோம். கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய வார்டுகளில் 1007 இடங்களைத்தான் பெற்றோம். இப்போது 2100 இடங்களை பெற்றிருக்கிறோம். அதே போல மாவட்டக் கவுன்சிலில் 2011–ல் 30 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நாங்கள் இப்போது 243 இடங்களில் வென்றிருக்கிறோம். இதை எல்லாம் பார்க்கும் போது எது வளர்பிறை? யாருக்கு வளர்பிறை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று ஸ்டாலின் பேசினார்.

உடனே இதற்கு நீண்ட விளக்கம் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தல் யார் மத்தியில் ஆள்வது என்பதை முடிவு செய்யும் தேர்தல், சட்டசபைத் தேர்தல் மாநிலத்தை யார் ஆட்சி செய்வது யார் நல்லாட்சி தருவார்கள் என்பதை தீர்மானிக்கும் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல். அந்தந்த பகுதிகளில் யாருக்கு செல்வாக்கு  என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலின் போது நகைக்கடன் ரத்து, விவசாயக்கடன் ரத்து, லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு என்ற பொய்யான வாக்குறுதி தந்ததால், அதை நம்பிய மக்கள் திமுக அணிக்கு வாக்களித்தார்கள். அதை வைத்து, நீங்கள் (அதிமுக) மக்கள் செல்வாக்கை இழந்து விட்டீர்கள் எனப் பேசினீர்கள். இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கிராமப்பகுதி சார்ந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் உங்கள் வசம் இருந்த தொகுதிகளை 45 ஆயிரம், 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றி இருக்கிறோம். இப்போது நடைபெற்ற கிராமப்பகுதி சார்ந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதனால் அதிமுகதான் வளர்பிறையாக வளர்ந்து வருகிறது என்று இ.பி.எஸ். ஆணித்தரமாக வாதாடினார். இதே கருத்தை தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார், திமுக அதிக இடங்களை வெற்றிந்தாலும் ‘ஆபரேசன் சக்ஸஸ், பேசன்ட் டெத்’  என்ற நிலைதான் ஏற்படும்.  எதிர்வரும் 2021 சட்டசபை பொதுத்தேர்தலிலும் மக்களின் ஆதரவோடு அதிமுக ஆட்சியே அமையும் என்று கூறினார்.

உடனே துனரமுருகன் எழுந்து, நாம் தெரிவிக்கிற கருத்தக்களைவிட ஊடகங்கள் கணிப்புதான் சரியாக இருக்கும் எனக்கூறி, ஒரு ஆங்கிலப் பத்திரிகை, இந்த தேர்தல் முடிவு அதிமுகவுக்கு பின்னடைவு என செய்தி வெளியிட்டிருக்கிறது. அதுதான் உண்மை என்றார். உடனே, அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக – திமுக இரண்டும் சரி சமம் என தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது அதுதான் சரியான கணிப்பு என்றார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த பல ஆண்டு களாக தேர்தல் வெற்றி தோல்விகளை அதிமுக – திமுக ஆகிய இரு கட்சிகளும் அவ்வப்பபோது பகிர்ந்து கொண்டுள்ளன.  அவ்வப்போது ஏற்படும் அரசியல் சூழல், மக்களின் மனநிலை, ஆளுந்தரப்பு மீது உள்ள நம்பிக்கை, அவ நம்பிக்கை, ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சியினர் மீதான பொதுப்பார்வை இவைகள்தான் இந்த வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன.

ஆளுமைமிக்க தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கிற சமீப காலத் தேர்தல்களிலும் கூட இந்த வெற்றி, தோல்வி மாறி மாறித்தான் வருகிறது. எம்.பி. தேர்தலில் படுதோல்வியை சந்தித்த அதிமுக இனி எழவே முடியாது என்று பேசினார்கள். ஆனால், இரண்டு இடைத்தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றதுடன் உள்ளாட்சி தேர்தலிலும், சற்றேக்குறைய திமுகவுக்கு இணையான வெற்றியை பெற்றிருப்பதால், இது ஆட்சிக் கட்சியான அதிமுகவுக்கு வளர்பிறை என்கிற கருத்து பொதுவெளியில் ஏற்கத்தக்கதாவே இருக்கும். அடுத்து நடைபெறவுள்ள 2021 சட்டசபை தேர்தலில் இந்த வெற்றி கை கொடுக்குமா? அதற்கு முன்னதாக நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊராட்சி தேர்தல், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சித் தேர்தல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்தே முழுமையான ‘வளர்பிறை’ யாருக்கு என்பது தெரியவரும்.