துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 63

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2020

பழங்கால சீன நாட்டின் தத்துவ சாஸ்திரங்கள்!

உலகின் பலன் நாடுகளில் காணப்படும் தத்துவ சாஸ்திரங்களில் சீன நாட்டின் தத்துவ சாஸ்திரங்கள் குறிப்பிடத் தக்கதாகும். சீனநாட்டில் கி.மு.551 முதல் கி.மு.479 வரையிலான ஆண்டுகளில் வாழ்ந்த “கன்பூசிஸஸ்” என்ற அறிஞர்தான் சீனாவில் தத்துவ சாஸ்திரத்தை முதன்முதலாக உருவாக்கி ஒழுங்கு படுத்தியவர் என்பது வரலாற்றுப் பதிவு. அவருடைய காலத்தில் அங்கு காணப்பட்ட சமயக்கோட்பாடுகளையும், தத்துவ ஆராய்ச்சிக் கருத்துக்களையும், பழங்காலத்துச் சூத்திரங்கள் மூலமாகவே மட்டும் நாம் அறிய முடியும்.

மக்களின் செயல்களும், இயற்கை நிகழ்வுகளும் கடவுளின் அருளால்தான் நடைபெற்று வருகிறது என்று ஆதிகாலத்தில் பல நாடுகளில் நம்பி வந்தது போலவே சீனநாட்டு மக்களும் நம்பி வந்தனர். மேலும் இந்த பிரபஞ்சத்துக்கும், மக்களுக்கும் பரஸ்பரம் நேரடி தொடர்பு இருப்பதாகவே மக்கள் எண்ணினார்கள். அதனால் முக்கியமான இயற்கை நிகழ்ச்சிகளை கவனித்து, அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை முன்னரே அறிந்து கொள்வதற்கான மந்திர முறைகளையும் அவர்கள் கையாண்டனர்.

ஆனால், காலப்போக்கில் அதாவது கி.மு 722 முதல் கி.மு 481 வரையிலான காலத்தில் சுன்–சியூ என்ற அறிஞரின் போதனையால் இந்த நம்பிக்கைகள் அறிஞர் பெருமக்களிடமிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து போயிற்று. பின்னர் கன்பூசிஸஸ், சீன இலக்கியங்களை நன்கு ஆராய்ந்து புதிய சீனத் தத்துவ சாஸ்திரங்களை உருவாக்கினார். அவற்றை ஆறு சூத்திரங்களாகவும், நான்கு பாகங்களாகவும் பிரித்து வைத்தார்.

இவைதான் சீன மக்களுடைய வேத நூல்களாக இன்றளவும் இருந்து வருகின்றன. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, கன்பூசியஸின் உபதேசங்களே சீனநாட்டின் அறநெறிச் சட்டமாக இருந்து வருகின்றன. இந்த உபதேசங்கள் மக்களிடையே உள்ள உறவுகளை மையப்படுத்தியே இருந்தன. ஆனாலும், அதில் உயர்ந்த தத்துவ கருத்துக்களும் பொதிந்து கிடந்தன.

மக்களிடையே பரிமாறப்படும் பரஸ்பர அன்பை மையப்படுத்தி ‘கரன்’ என்ற பெயரில் கன்பூசியஸ் மூலமந்திரம் ஒன்றை உருவாக்கி அதை பரப்பினார்.அரசியலுக்கு அவர் கூறிய இலக்கணமும் அன்பிற்பால் பட்டதே. எல்லாக் காரியங்களையும் ஒழுங்கு படுத்துவது அரசியல்தான் என்பதில் கன்பூசியஸ் உறுதியாக இருந்தார். எந்த நாடு ஒவ்வொரு மனிதனும் பிறரிடம் அன்பு செலுத்தும்படி போதிக்கிறதோ, அதுவே சிறந்த லட்சியத்தை கொண்ட நாடாகும் என கன்பூசியஸ் தெளிவுபடக் கூறுகிறார்.

பின்னர், கி.மு. 604–ல் பிறந்த லாவேட்ஸே என்ற சீன அறிஞர் ‘தாவோ’ எனும் புதிய மதத்தை தோற்றுவித்து புதிய கொள்கைகளை, சித்தாந்தங்களை, தத்துவங்களை உருவாக்கினார். ‘தாவோ’ எனும் இயற்கை நியதி சர்வ வல்லமை உடையது. நிரந்தரமானது, எப்போதும் மாறாத தன்மையுடையது என்ற கருத்தைப் பரப்பினார். மனிதன் பூமியிலிருந்து தோன்றினான், பூமி விண்ணிலிருந்து தோன்றியது. விண்ணுலகு தாவோவிலிருந்து தான் தோன்றியது என்ற கருத்து அப்போது பரப்பப்பட்டது. எல்லாவற்றுக்கும் அடிப்படை இயற்கை. அந்த இயற்கையிலிருந்துதான் ‘தாவோ’ தோன்றியது. அந்த இயற்கை வாழ்வையே மக்கள் வாழ வேண்டும் என லாவோட்ஸேவும், அவரது சீடர்களும் போதித்தனர். குறிப்பாக, சாவுன்ட்ஸே எனும் சீடர் ஒருவர், புரட்சிகரமான யோசனைகளை தெரிவித்தார். துறவிகளையும், அறிஞர்களையும் புறக்கணித்து விட்டால் நாட்டில் வழிப்பறி நின்று போகும். நவரத்தினங்களை வீதியில் வீசி எறிந்து விட்டால், திருட்டு ஒழிந்துபோகும். நினைவு சின்னங்களையும், சிம்மாசனங்களையும் எரித்துவிட்டால் மக்கள் கண்ணியமான முறையில் எளிய வாழ்க்கை வாழலாம். நாழியையும் – தராசையும் உடைத்து விட்டால் சண்டை சச்சரவுகள் தலைகாட்டாது என பிரசாரம் செய்தார்.

நாகரிகம், பண்பாடு என்று பேசுவது, அதை மதிப்பது ‘தாவோ’ இசக்கொள்கைக்கு எதிரானது தீமைக்கும், பாவத்திற்கும் அது இடமளிக்கக் கூடியது என்றும் அவர்கள் கருதினர். இலக்கியம், சட்டம், அரசியல், அறநெறிகளும் கூட தீதானவை மக்களுக்கு எதிரானவை என்று ‘தாவோ’ எனும் மதம் – தீவிரமாக போதித்தது. நாளடைவில் அது சீன நாட்டிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக மறந்துபோனது.

பிரபலமான தர்க்கவாதிகளும், தத்துவ சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களான ஹூயி – விஹ் என்ற அறிஞரும் குங்சுன்–லுங் என்ற தத்துவ சாஸ்திரியும், லாரீவாட்ஸேவின் சீடரான சாவுன்–ட்டூஸ முரண்பாடுகளை அம்பலப்படுத்தினர். காலப்போக்கில், மோ–ட்ஸே என்ற அறிஞர் ஒருவர் மற்றொரு வகையான தத்துவ சாஸ்திரத்தை அறிமுகப்படுத்தி அன்பு, அமைதி, சமாதானம் என்பவற்றை போதித்து அதன்படி வாழ்ந்தார்.

சீன நாட்டின் வரலாற்றில் கன்பூசிஸஸ் காலத்திற்கு பிறகு மிகச்சிறந்த தத்துவ அறிஞராக, மோ–ட்லே, மக்களால் மதிக்கப்பட்டார். வாழ்வியல் அறங்களுக்கு அறிவு பூர்வமான விளக்கங்களை, நல்ல பல ஆதாரங்களை அமைத்து தனிதத்துவ சாஸ்திரத்தை அவர் அமைத்தார். அது பெரும் வரவேற்பை பெற்றது. சீனாவில் சட்டத்தை பிரதான அம்சமாக கொண்ட தத்துவ சாஸ்திரத்தை  உருவாக்கியவர் ஹன்–பெயி–ட்ஸே எனும் அரச குமாரர் ஆவார். சட்டம், அதிகாரம், அரசியல் முறைகள் எவற்றையும் மக்கள் புறக்கணிக்கக் கூடாது என்றும், இவைகளே மக்களுக்கு நன்மை தரும் நல்வழி காட்டும் எனவும் அவர் போதித்தார். அறிவை அறிவுக்காகவே தேடுவது என்பது சீனத் தத்துவத்தின் நோக்கம் இல்லை. மக்கள் பிரச்னைகள் இன்றி இன்பமாக வாழ்வதற்கு பயன்படும் அறிவையே நாட வேண்டும் என்ற கொள்கை உடையவர்களாகவே, அந்த காலகட்டத்தில் வாழ்ந்துள்ளனர்.

பணம், புகழ், செல்வாக்கு எல்லாவற்றைக் காட்டிலும் ஒழுக்கத்தை பிரதானமாகக் கொண்ட, தத்துவ சாஸ்திரங்களை, அன்பை போதிக்கும் கருத்துக்களை, மக்கள் அனைவரும் சமம் என்ற உணர்வுகளை சொல்லும் கருத்துக்களையே அவர்கள் பெரிதும் மதித்து போற்றி வந்துள்ளனர். சீன நாட்டில் தோன்றிய தத்துவ சாஸ்திரங்களில் பெரும்பாலானவை ‘அதகத்தில் ஞானி, புறத்தில் அரசன்’ என்று வலியுறுத்துகிற உபதேசங்களையே சொல்லி உள்ளன. மனிதன் எப்படிப் பட்டவன், அவன் குணங்கள் எத்தகையவை என்று மட்டுமே பார்க்க வேண்டும், வெறுமனே அவன் அறிவை, செல்வங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. நூலறிவு இல்லா விட்டாலும் ஞானி ஞானிதான். நூலறிவு இருந்தாலும் தீயவன், தீயவன்தான் என்பதுதான் அவர்களின் நிரந்தரக் கொள்கைகளாக, முந்தைய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து வந்துள்ளன.

இந்த தத்துவ சாஸ்திரங்கள் எல்லாம் காலப்போக்கில் நீர்த்துப்போய் இப்போது கம்யூனிஸ்டுகள் ஆட்சியின் கீழ் சீன நாடு இருந்து வருதை நாம் அறிவோம்.