முதியோருக்கு உதவும் இளைஞர்கள்!

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2020

எனது ஆதார் அட்டையில் தவறு இருந்தது. இதனால் எனது வருமான சான்றிதழை சமர்ப்பிக்க முடியவில்லை. இது ஏன் ஏற்பட்டது என்றும் தெரிய வில்லை. எனக்கு முதியோர் உதவி தொகை கிடைக்கவில்லை என்று கூறு கின்றார் உத்தரபிரதேசத்தில் உள்ள சனாதாபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த அஸ்ராபி பேகம் என்ற முதிய பெண்மணி. இப்போது இவருக்கு மாதம் ரூ.500 முதியோர் உதவி தொகை கிடைக்க தொடங்கியுள்ளது. இந்த ஐநூறு ரூபாய் பெரிய தொகை இல்லாவிட்டாலும், அவரது கை செலவுக்கு உதவுகிறது. படிப்பறிவில்லாத அஸ்ராபி பேகத்தால், முதியோர் உதவி தொகை பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடிய வில்லை.

அவரது கிராமத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களின் உதவியால், அஸ்ராபி பேகத்திற்கு முதியோர் உதவி தொகை கிடைக்க தொடங்கியுள்ளதால், மகிழ்ச்சியாக இருக்கின்றார். “என்னைப் போன்ற முதியவர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு, எந்த நேரத்திலும் இளைஞர்கள் உதவி செய்கின்றனர்” என்று அஸ்ராபி பேகம் தெரிவித்தார்.

சமுதாயத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட வர்கள் முதியோர்களே. அவர்கள் குடும்பத்திலிருந்து தொடங்கி, எல்லா நிலையிலும் புறக்கணிக்கப்படுகின்றனர். முதியோர்கள் எதிர்ப்பை தெரிவிக்க முடியாமல், சிதறிக்கிடக்கின்றனர். 2011ம் வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உத்தரபிரதேசத்தில் 1 கோடியே 94 லட்சம் முதியவர்கள் உள்ளனர். இதில் 1 கோடியே 64 லட்சம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். கிராமப்புறங்களில் விவசாய குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைஞர்கள் பிழைப்பு தேடி நகர்ப்புறங்களுக்கு செல்கின்றனர். இதனால் முதியோர்களை கவனிக்க ஆட்கள் இல்லை. முதியோர்களில் முக்கால்வாசி பேர் பணத்தேவைக்காக மற்றவர்களையே நம்பியுள்ளனர். முதியோர்களில் 38 சதவிகித ஆண்களும், 84 சதவிகித பெண்களும் மற்றவர்களையே நம்பியுள்ளனர். இவர்கள் தினசரி செலவுக்கும், மருத்துவ செலவுக்கும் கையில் பணம் இல்லாமல் தவிக்கின்றனர். முதியோர்களில் 65 சதவிகிதம் பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து முதியோரின் மருத்துவ செலவை ஊகித்துக் கொள்ளலாம்.

உத்தரபிரதேசத்தில் 60 வயதை கடந்த முதியோர்களில் ஆண்கள் சராசரியாக 75 வயது வரையிலும், பெண்கள் 78 வயது வரையிலும் வாழ்கின்றனர்.  இவர்கள் 60 வயதை கடந்த பிறகு, இறக்கும் வரை மற்றவர்களையே நம்பியுள்ளனர்.

முதியோர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை புரிந்து கொண்ட பிறகு, கடந்த பத்தாண்டுகளில் முதியோர்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. முதியோர், கணவனை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் போன்ற திட்டங்களை அமல்படுத்துகிறது. ஆனால் கிராமப்புறங்களில் வாழும் முதியோர்களுக்கு, அரசின் நலத்திட்ட உதவிகள் பற்றி தெரியவில்லை. இது பற்றி சிலருக்கு தெரிந்து இருந்தாலும் கூட, இந்த நலத்திட்ட உதவிகளை பெற பல பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டியதுள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு தகுதியானவர்களில் பெரும்பாலோர், இந்த உதவிகளை எப்படி பெறுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

உத்தரபிரதேசத்தில் முதியோர்களில் எழுத படிக்க தெரிந்தவர்கள் 30.7 சதவிகிதம் மட்டுமே. அவர்களாலும் கூட அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிப்பதில் இருந்து, தேவைப்படும் சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் தொடர்பாக தகவல்களை கேட்பதும், சான்றிதழ் பெறுவதும் சாதாரண காரியமாக இல்லை. இந்த முதியோர்களின் பிள்ளைகள் பிழைப்புக்காக வெளியூர்களில் சென்று இருப்பதால், அல்லது பாராமுகமாக இருப்பதால் எந்த உதவியும் கிடைப்பதில்லை.

அதிகாரிகளுக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால், அவர்களாலும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ முடியவில்லை. அரசின் பல நலத்திட்ட உதவிகள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கே கொடுக்கப்படுகிறது. அரசு ஒதுக்கும் நிதி முழுவதும் செலவழிக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறது.

கியான்பூர் தாலுகாவில் உள்ள ரெய்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் படித்து நல்ல வேலையில் உள்ளவர்கள், இந்த சிக்கலை உணர்ந்துள்ளனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு படித்து முன்னேறி, பல்வேறு நகரங்களில் வேலை பார்க்கின்றனர். அவர்கள் வசிக்கும் இடம், அவர்களது கிராமத்தை விட முன்னேற்றம் அடைந்த நகரங்கள். அந்த நகரங்களில் அவர்களது வீட்டிற்கு அருகாமையில் வசிக்கும் முதியவர்களின் நிலை நன்றாக இருப்பதை உணர்கின்றனர். இது அவர்களது மனதை சங்கடப்படுத்துகிறது. அவர்களால் முடிந்த அளவு சொந்த கிராமத்தைச் சேர்ந்த முதியோர்களுக்கு உதவி செய்கின்றனர். ஆனால் இன்னும் பலருக்கு உதவி தேவைப்படுகிறது.  

இவ்வாறு 25 வயது முதல் 45 வயதிற்குள் உள்ள சிலர், முதியோர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்தனர். இதை பார்த்து பல இளைஞர்கள் முதியோருக்கு உதவி செய்ய முன்வந்தனர். தங்களால் முதியோர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய முடியும் என்பதை உணர்ந்தனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ‘பன்டமென்டல் ஆக்சன் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன்’ [Fundamental Action and Research Foundation (FARF)] என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.  

நமது நாட்டில் தற்போது முதியோர்களுக்காக 25 விதமான நலத்திட்ட உதவி திட்டங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை திட்டங்கள் முதியோர்களுக்கு போய் சேரவில்லை. இந்த திட்டங்களை அரசு நல்ல நோக்கத்துடன் அறிமுகப்படுத்தி இருந்தாலும், யதார்த்தத்தில் நடைமுறையில் இல்லை. அதே நேரத்தில் நிலைமை தற்போது படிப்படியாக மாறிவருகிறது.

கிராமப்புறத்தை சேர்ந்த பல இளைஞர்கள் பல்வேறு தடைகளை தாண்டி முன்னேறி நல்ல நிலையில் இருக்கின்றனர். இந்த இளைஞர்கள் அவர்களின் திறமையை பயன்படுத்தி கிராமப்புறங்களில் உதவி தேவைப்படுபவர்களுக்கு, குறிப்பாக முதியோருக்கு தேவையான உதவிகளை செய்வது வரவேற்கத்தக்கதே.

“தாங்கள் சார்ந்துள்ள சமுதாயத்திற்கு எதாவது நல்லதை செய்ய வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர்.இந்த முன் முயற்சி,மற்றவர்களையும் சேவை செய்ய தூண்டுகிறது” என்கின்றார் ஆனந்த் பாண்டே. பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் ஆனந்த் பாண்டே, பன்டமென்டல் ஆக்சன் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவர்.

இந்த பவுண்டேசனைச் சேர்ந்த இளைஞர்கள் முதியோர்களுக்கு தேவையான உதவிகளை செய்கின்றனர். பல்வேறு அலுவலகங்களுக்கு சென்று, முதியோர்கள் நலத்திட்ட உதவிகள் பெற தேவையான சான்றிதழ்களை பெற்று தருகின்றனர். முழுமையாக அமல்படுத்தப்படாத நலத்திட்ட உதவிகள் பற்றி அறிந்து கொண்டு, அவற்றை அமல்படுத்த திட்டமிடுகின்றனர். தற்போது இவர்கள் பாடோகி மாவட்டத்தில் ஆறு கிராமங்களில் சேவை செய்கின்றனர். எதிர்காலத்தில் அதிக அளவு சேவை மனப்பான்மையுள்ள இளைஞர்களை சேர்த்துக் கொள்ளவும், அதிக கிராமங்களில் உதவிகள் தேவைப்படும் முதியோருக்கு உதவி செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

நன்றி: வில்லேஜ் ஸ்கொயர் இணையதளத்தில் அபிஜித் ஜாதவ்.