![]() | ![]() | ![]() |
தொழில் புரியோருக்கு சில முக்கிய வணிகக் குறிப்புகளை அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். அவை
அவுட்சோர்சிங்
உங்கள் நிறுவனத்தில் உள்ள அதிக முக்கியத்துவம் இல்லாத பணிகளை வெளி ஏஜன்சிகளின் மூலம் செய்துகொள்வது (அவுட்சோர்சிங்) பற்றி சிந்தியுங்கள். பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சம்பளம், கணக்கு வழக்குகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஹவுஸ் கீப்பிங, கணினிகள் பராமரிப்பு போன்ற பணிகளை அவுட்சோர்சிங் முறையில் நிறைவேற்றிக் கொள்வதன் மூலம், தங்களுடைய முழு கவனத்தையும், சக்தியையும் அவர்களுடைய முக்கிய பணிகளின் மீது செலுத்தி வருகின்றன.
தலைமைப் பண்பை அடைய வழிகோல்
பலதரப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு, தொழில்துறை அமைப்புகள், சங்க பிரதிநிதிகளுக்கு முன்வையுங்கள் (பிரெசெண்டெஷன்). நீங்கள் எந்தத் துறையில் வல்லுனரோ அந்தத் துறையைப் பற்றியும், அதன் எதிர்காலம் பற்றியும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடலாம். இந்த முயற்சிகளுக்கு இடைவிடா கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவை தேவைப்படும். மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்தத் தலைப்புகள், அதன் மேல் நீங்கள் செய்த ஆய்வுகள் ஆகியவை உங்களைப்பற்றி, உங்கள் ஆழ்ந்த அறிவைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயத்தை பார்வையாளர்கள் மத்தியில் உருவாக்கிக் கொடுக்கும்.
தொழிற் முறை நட்புக்களை மேம்படுத்துதல்
உங்களின் வாடிக்கையாளர்களுடன் சுமுக உறவுகளை உருவாக்கி அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதன் மூலம் உங்களின் சேவைகளின் மீது ஒரு நல்ல அபிப்ராயம் மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்துங்கள். உங்களின் சேவை அல்லது உங்களின் விற்பனைப் பொருள் மட்டுமல்லாது அவர்களின் மற்ற தேவைகளையும் அறிந்து அவை அனைத்தையும் ஒரே இடத்திலிருந்து அவர்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள். இது அவர்களின் மத்தியில் உங்களுக்கு நன்மதிப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் உங்களின் நீண்ட கால தொழில் உறவுக்கு கைக்கொடுக்கும்.
பணப்புழக்கத்தை அதிகரிக்க ஒரு வழி தொழிலாளர் பயிற்சிகள்
உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் மற்றும் ஊழியர்களுக்குத் தகுந்த பயிற்சிகளை ஆண்டு தோறும் வழங்குவதன் மூலம், அவர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதுடன், சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை அவர்கள் கற்றுக்கொண்டு அவற்றை நம் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்த முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
பத்திரிகை பிரசுரங்கள்
உங்கள் பகுதியில் பிரசுரமாகும் தினப் பத்திரிகைகள், வாரப் பத்திரிகைகள் மற்றும் தொழிற்சங்க வெளியீடுகள் ஆகியவற்றில் ஏதாவது கட்டுரைகளை தொடர்ந்து எழுத முயற்சி செய்யுங்கள். அவ்வாறு பிரசுரம் செய்யப்பட கட்டுரைகள் மற்றும் குறிப்புகள் வாசகர்கள், பொதுமக்கள் மத்தியில் உங்களுக்கென ஒரு நன்மதிப்பைப் பெற்றுத் தரும். அது உங்கள் நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
நுகர்வோர் கருத்துக்கள்
உங்கள் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் உங்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான கருத்துக்கள் மற்றும் அனுபவங்களைக் கேட்டு பதிவு செய்வதை ஒரு வழக்கமாகக் கொண்டிருங்கள். அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து தேவைப்படும் மாற்றங்களை / முன்னேற்றங்களை உங்களின் சேவைகளிலும் உற்பத்திப் பொருட்களிலும் கொண்டு வாருங்கள்.
நுகர்வோர் பிரிவுகளுக்கேற்ற விற்பனைத் திட்டம்
சற்றே கடினமானாலும், ஒவ்வொரு முக்கிய சந்தைப் பிரிவையும் அடையாளம் கண்டு அவைகளுக்கென தனித்தனியாக விற்பனைத் திட்டங்களை தயார் செய்துக் கொள்ளுங்கள். இத்திட்டங்கள் உங்கள் இலக்கில் உள்ள நுகர்வோர்களை சரியாக அடையாளம் காண, அவர்களின் பல தரப்பட்ட எதிர்பார்ப்புகளை தக்க சந்தர்ப்பத்தில் நிறைவேற்ற தேவைப்படும் ஒரு பதிவாக உங்கள் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு பயன்படும். சரியான திட்டமிட்ட வழிகாட்டுதல்கள் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படாத காரணத்தால், பல நிறுவனங்கள் தாங்கள் உண்மையில் பெற்றிருக்க வேண்டிய விற்பனையின் பெரும்பகுதியை இழந்துவிடுகின்றன. சில சமயம், இந்நிறுவனங்கள் இது சம்மந்தமான முடிவுகளை விற்பனைப் பிரதிநிதிகளின் கையிலேயே விட்டு விடுவதாலும் பெறும் இழப்பை நிறுவனங்கள் சந்திக்க வேண்டி வரலாம்.
காலத்திற்கேற்ற மாற்றத்தை கொண்டுவாருங்கள்
மாறிவரும் சூழலுக்கேற்றவாறு உங்கள் வியாபாரத்தில் என்ன புதுமைகளை புகுத்தலாம், மாற்றங்களை கொண்டு வரலாம் என்ற சிந்தனையை மறந்து விட வேண்டாம். உங்களுடைய வாடிக்கையாளர்களின் அனுபவங்களில் எந்த அளவுக்கு முன்னேற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதற்கு, உங்களை சுற்றியுள்ள காரணிகள் மட்டுமல்லாது, உலகெங்கும் நடைபெறும் மாற்றங்களை கவனித்து அதில் நமக்கு தேவைப்படும் விஷயங்களை நடைமுறைப்படுத்தலாமே? மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
மாற்றத்தின் பரிணாமம்
என்னென்ன மாற்றங்கள் நம்மை சுற்றி நிகழ்கின்றன என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், வெளிச்சந்தையில் என்னென்ன மாற்றங்கள் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பதை புரிந்துக் கொள்ள முயலுங்கள். அந்த மாற்றங்களினால் ஏற்படும் அதிர்வுகளை எதிர்கொள்ள, சமாளிக்க தேவைப்படும் முயற்சிகளை மேற்கொண்டு, அதன் மூலம் கிடைக்கக் கூடிய நன்மைகளை முழு வீச்சில் அடைய முயலுங்கள். அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்கின்றனவோ அந்த சமயங்கள் உங்களின் பழைய, நன்கறிந்த பழக்க வழக்கங்களை உடைத்தெறிந்து புதிய யுக்திகளை புகுத்த கிடைத்த சந்தர்ப்பமாகக் கருதி முன்னேறுங்கள்.
வாடிக்கையாளர்களின் செறிவு
உங்களுடைய தொழில் ஒரு சில பெரு நிறுவனங்களை மட்டுமே சார்ந்திருக்கிறதா? ஏனெனில் உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி அந்த ஒரு சில வாடிக்கையாளர்களின் தொழில் வளர்ச்சியை ஒட்டியே அமையும். மேலும், வளர்ச்சியடைந்த பெரு நிறுவனங்கள் தங்களுடன் வியாபாரம் செய்யும் சிறு நிறுவனங்களிடம் பொருட்களை மிகவும் குறைந்த விலையிலேயே வாங்க முன்வருவதால், பெரிய லாபங்களை நீங்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. எனவே, அதிக அளவிலான சிறு மற்றும் குறு வாடிக்கையாளர்களை கொண்டிருப்பது உங்கள் தொழில் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி செய்யும்.
இணையதளத்தின் மூலம் தொழில் வளர்ச்சி
இன்றைய காலக்கட்டத்தில் பெரும் அளவிலான மொத்த மற்றும் சில்லறை வியாபாரங்கள் இணைய தளத்தின் மூலம் நடைபெற்று வருவதினால், உங்கள் நிறுவனத்திற்கென்று ஒரு இணையதளத்தை நிறுவுவது அவசியம். இதன் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வது மட்டுமல்லாமல், வியாபாரம் குறித்த விசாரணைகளையும் மேற்கொள்ளலாம். இந்த இணைய தளத்தை ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லட்களின் மூலமாக இயக்க எதுவாக அமைக்க வேண்டும். வரும் காலங்களில் டெஸ்க் டாப் கணினிகளை உபயோகிக்கக்கூடிய வாடிக்கையாளர்கள் பெருமளவில் குறையும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்து இருப்பதால், ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லட்கள் மூலம் உங்கள் இணையத்தை இயக்க எதுவாக அமைக்க வேண்டும்.
உங்களின் நோக்கம் மற்றும் தொலைநோக்கு திட்டங்கள்
உங்கள் நிறுவனத்திற்கான குறிக்கோள் மற்றும் தொலைநோக்கு திட்டங்களை தீட்டி இருக்கிறீர்களா ? இந்த திட்டங்கள் உங்களின் நிறுவனத்தின் குறிக்கோள்களை அடையக்கூடியதாக இருக்கிறதா? உங்கள் உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகள் தங்களின் சொந்த வளர்ச்சியை மட்டுமே குறியாக கொள்ளாமல், சமூக மேம்பாட்டையும் நோக்கமாக கொண்டிருக்கிறதா? மேம்பாட்டுக்கும் எந்த வகையிலாவது உதவும் வகையில் திட்டமிடப்படுவது உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
போட்டியாளர்கள் மீது கவனம்
உங்கள் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறீர்களா ? ஏதாவது புதிய பொருட்கள் அல்லது சேவைகள் அவர்களால் அறிமுகப் படுத்தப்படுகின்றனவா ? வாடிக்கையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை வாங்க தூண்டும் வகையில் புதிய விளம்பரங்களை கையாளுகிறார்களா என்பதை அவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிப்பதன் மூலமும், அவர்களுடைய இணையதளத்தை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமும் அறிந்து அதற்கேற்றாற் போல் நாம் திட்டமிடலாம்.
வருடாந்திர விருதுகளை அறிமுகம் செய்தல்
உங்கள் உற்பத்திப் பொருள் மற்றும் சேவைகளுக்கு ஏற்றாற்போல் வருடாந்திர விருதுகள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வதன் மூலம் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை நம் மீது திருப்ப முடியும். இது உங்கள் நிறுவனத்தின் பெயரை, பொருட்கள் மற்றும் சேவைகளை மக்கள் மனதில் பதிய வைக்க உதவும்.
தகவல் தொழில்நுட்பம்
உங்கள் தொழிலில் உள்ள பல்வேறு நடவடிக்கைகள் / பணிச்சுமை / செயல்பாடுகளை தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் எந்த வகையில் குறைக்க முடியும் என்பதை தொடர்ந்து ஆய்வு செய்யுங்கள். இதன் மூலம் கால மற்றும் பொருள் விரயங்களை தவிர்த்து, குறைந்த செலவில் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு நம் பொருட்களை சிறந்த விலையில் அளிக்க முடியும்.
தரநிலை அளவீடு
உங்கள் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகள் / உற்பத்தி செயல்முறைகள் / வாடிக்கையாளர் அனுபவங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை உங்கள் போட்டியாளர்களின் நடவடிக்கைகளோடு தரநிலை அளவீடு செய்து, எந்த வகையில் சிறந்த சேவைகளை நாம் வழங்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.