கலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 98

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2020

திக்கும் வரிகளிலும் தித்திக்கும் இன்னிசை!

‘வானம்­பாடி’  படத்­தில் இடம் பெற்ற போட்­டிப் பாட­லான, ‘ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக’, ஆண் கவி­யின் தோல்­வி­யி­லும் பெண் கவி­யின் வெற்­றி­யி­லும் முடி­கி­றது. அந்த வெற்­றி­யைக் கொண்­டா­டு­வ­து­போல், அரங்­கமே கைத்­தட்­ட­லில் அதிர்­கி­றது. தோற்­றுப்­போன ஆணும் இந்த மகிழ்ச்­சி­யில் கலந்­து­கொள்­வது அவ­னு­டைய பெருந்­தன்­மை­யை­யும் நல்ல உள்­ளத்­தை­யும் காட்­டு­கி­றது. அதற்கு ஏற்­ற­வாறு அவன் வாழ்க்­கை­யில் ஒரு திருப்­பம் காத்­தி­ருக்­கி­றது....அவ­னைப் போட்­டி­யில் வென்ற அந்­தப் பெண் கவி­ஞர், அவ­னைக் கைப்­பி­டிக்க  விரும்­பு­கி­றாள்!

கதைப்­படி இப்­ப­டி­யெல்­லாம் திருப்­பு­மு­னை­யாக அமைந்த பாடல், மகா­தே­வ­னு­டைய இசை­ய­மைப்­பின் தன்­மை­க­ளைத் தெளி­வாக வெளிப்­ப­டுத்­து­கி­றது. சில பாடல்­க­ளில், அவர் ஒரு ராகத்­தைத் தழு­விப் பாட­லுக்கு அழ­கான அஸ்­தி­வா­ரம் அமைப்­பார். ஆனால், வெவ்­வேறு உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­த­வும் பாட­லுக்கு வித­வி­த­மான வண்­ணங்­களை சேர்க்­க­வும், முத­லில் தொடங்­கிய ராகத்­தி­லி­ருந்து மாறிக்­கொண்டே இருப்­பார். இந்த போக்கு, அவ­ரு­டைய மெட்­ட­மைப்­பிற்கு ஒரு அசாத்­திய ஜீவ­னை­யும் புதுப்­புது அழ­கு­க­ளை­யும் நல்­கும்.

‘கல்­தோன்றி மண்­தோன்றி முன்­தோன்று தமிழே, கவி­ம­ழை­யில் ஆடி­வ­ரும் கன்­னி­யிள மயிலே’ என்று கதா­நா­ய­கன் தமிழ்த்­தாய் வாழ்த்து  பாட, ‘பொதிகை மலை உச்­சி­யிலே புறப்­பட்ட தமிழே, பூங்­க­விதை வானேறி தவழ்ந்து வரும் நிலவே’ என்று கதா­நா­யகி பாட,   கனி­வும் குழை­வும் நிறைந்த ஒரு சூழல்  அமை­கி­றது. இதற்கு ஒரு முக்­கிய கார­ணம், பாட­லின் இந்த முன்­னோட்ட வரி­க­ளுக்கு மோகன ராகத்­தில் மகா­தே­வன் தந்த அமைதி தழு­வும், அழ­கான புறப்­பாடு.  

‘துணை வேண்­டும் தாயே, நின் திரு­வ­டி­கள் வாழ்க’ என்று நாய­கன் தன் வேண்­டு­தலை முடிக்­கும் போது, வரப்­போ­கிற சுரக்­க­ல­வை­க­ளுக்கு ஒரு  அச்­சா­ர­மாக, மேற்­படி ராகத்­தில் வராத ஸ்வரங்­களை தவ­ழச் செய்­தார் மகா­தே­வன்.

எப்­ப­டி­யும், பாடல் முழு­தும் மோக­னத்­தில் கவர்ந்­தி­ழுக்­கும்  பிடி­கள், வரு­வ­தும் போவ­து­மாக இருக்க,    வேறு­பட்ட கருத்­துக்­களை வீரி­ய­மு­டன் நாய­கன் தொடுக்­கும் கேள்­வி­கள், உயர்ந்த ரேஞ்­சி­லும் மோக­னத்­தில் வராத ஸ்வரங்­க­ளி­லும் அமைந்­தி­ருக்­கின்­றன. இது பாட­லுக்கு வித்­தி­யா­ச­மான பரி­மா­ணங்­களை அளிக்­கி­றது.  அனைத்­தி­லும் மகா­தே­வ­னின் மூல மந்­தி­ரம் ஒன்­று­தான். திரைப்­பா­ட­லுக்­குப் பிர­தா­ன­மா­னது ராகம் அல்ல, உணர்ச்­சி­க­ளின் பிர­தி­ப­லிப்பு, அவற்­றின் பிர­வா­கம்!

காத­லி­யின் மர­ணத்­தால் தனக்கு ஏற்­பட்ட காயத்தை, ‘காத­லித்­தாள் மறைந்து விட்­டால் வாழ்வு என்­னா­கும்’ என்று நாய­கன் ஆதங்­கத்தை வினா­வா­கத்­தொ­டுக்­கும் போது,  ‘அன்பு காட்­டு­கின்ற, வேறி­டத்­தில் காதல் உண்­டா­கும்’ என்று நாயகி பதில் அளிக்­கி­றாள்! அவன் கேள்­வி­யில் உள்­ளத்­தில் உள்ள புண்­ணின் தகிப்பு தெரி­கி­றது.  அவள் பதில், வெப்­பத்தை ஆற்­றும் குளிர்ச்­சி­யான மருந்­தாக வெளிப்­ப­டு­கி­றது. இந்த உணர்ச்­சி­யைத் தெரி­விக்க (மோக­னத்­திற்கு) அன்­னி­ய­மான ஸ்வரங்­கள் உத­வு­கின்­றன.

 நாய­கி­யின் வெற்றி  அஸ்­தி­ர­மாக, காள­மே­கக்­க­வி­யின் ஒரு பாட­லைக் கண்­ண­தா­சன் அமைத்­தார்.  இந்த  கவிதை, எளி­தில் பொருள் கொள்ள முடி­யாத சித்­தி­ரக் கவிதை. ஆனால் வலிந்து பொருள்­கூ­றக்­கூ­டிய கவிதை!    

‘‘தாதி தூது தீது, தத்­தும் தத்தை சொல்­லாது

தூதி தூது ஒத்­தித்­தது, தூது செல்­லாது

தேது தித்த  தொத்து தீது, தெய்­வம் வராது, இன்று

துத்தி தத்­தும் தத்தை வாழ தித்­தித்­த­தோது’’!

நாயகி வழங்­கிய இந்த ‘தா-தூ-தீ’ கவி­தை­யைக் கேட்­ட­தும்,‘என்­னப்பா, கேள்­வியா இது, என்ன உளர்­றாங்க’ என்று நாய­கன் கேட்­கி­றான்!

‘அவங்க ஒண்­ணும் உள­றலை...நீ தான் திணர்ற ’ என்று பதில் வரு­கி­றது!  பிறகு பாட்­டி­லேயே நாயகி முன் வைக்­கிற இதன்­பொ­ருள் தான் என்ன?

தாதி தூது தீது = தாதி­யின் (பணிப்­பெண்­ணின்) தூது  தீயது.

தத்­தும் தத்தை சொல்­லாது = தத்­து­கிற தத்தை (கிளி) நல்ல முறை­யில் தூது சொல்­லாது.

தூதி தூது ஒத்­தித்­தது, தூது செல்­லாது = தோழி­யின் (தூதி­யின்) தூது ஒத்­திப்­போ­குமே அன்றி தூது செல்­லாது.

தே-து தித்த  தொத்து தீது, தெய்­வம் வராது = ‘தே’ என்ற தெய்­வத்­தைத் துதித்­துத் தொற்­றிக்­கொள்­வ­தும் தீது, (ஏனென்­றால், இதற்­கெல்­லாம்) தெய்­வம் வராது (நாமெல்­லாம் சுந்­த­ரரா என்ன, இறை­வனே காதல் தூது செல்ல?)

இன்று துத்தி தத்­தும் தத்தை வாழ = இன்று காதல் நோயால் தேமல் நிறம் கொண்ட (துத்தி தத்­தும்), கிளி­போன்ற நாயகி வாழ,

தித்­தித்த தோது (தித்­தித்­தது ஓது) = தித்­திக்­கும் செய்­தி­யைக் ஓது, அதா­வது கூறு.

காள­மே­கப்­பு­ல­வ­ரின் வெண்­பாவை சற்று எளி­மைப்­ப­டுத்தி கண்­ண­தா­சன் சரி­யான இடத்­தில் பிர­யோ­கித்­தார். அதற்­கான  பொரு­ளை­யும் பாட­லின் கடைசி வரி­க­ளின் அவர் காட்­டி­னார்:

‘‘அடிமை தூது பயன்­ப­டாது

கிளி­கள் பேசாது

அன்பு தோழி தூது சென்­றால்

விரை­வில் செல்­லாது

தெய்­வத்­தையே தொழுது நின்­றால்

பயன் இருக்­காது, இளம்

தேமல் கொண்ட கன்னி வாழ

இனி­யது கூறு’’ என்ற விளக்­கம், துள்ளி வரும் அழகு நடை­யில் அமைந்­தி­ருக்­கி­றது. மொத்­தப் பாடலை எடுத்­துக் கொண்­டால் கூட, மகா­தே­வ­னின் முத்­தி­ரை­யான நெஞ்சை அள்­ளும் தாளக்­கட்டு அதன் வசீ­க­ரத்தை மேலும் கூட்­டு­கி­றது.

பாட்­டைப் போல் ஒரு அற்­பு­தம் இல்லை என்­றார் பார­தி­யார். பாடல் வரி­கள் கூறும் கருத்­துக்­களை இன்­னி­சை­யின் வாயி­லாக அரு­மை­யாக வெளிப்­ப­டுத்­தும் மகா­தே­வ­னின் பாட்­டை­யைப்­போல் (பாதை­யைப்­போல்),  ஒரு அற்­பு­தம் இல்லை என்று நாம் கூற­லாம். இல்லை என்­றால் வாயில் தத்தி, திக்கி, சிக்­கிக்­கொள்­ளும் வரி­க­ளைக் கூட வெற்­றிப் பாட­லின் சிக­ர­மாக வழங்க முடி­யுமா?

  (தொட­ரும்)