ஸ்ரீரங்கம் கோயில் உள்பட பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள் : 06 ஜனவரி 2020 12:36

திருச்சி,

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு  திருச்சி - ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. கோவிந்தா... கோவிந்தா... கோஷங்களுக்கு நடுவே பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. விழாவில் நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல் பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

வைணவ தலங்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

பரமபத வாசல் திறக்கப்பட்ட உடன் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்திப் பரவசத்தில் முழக்கமிட்டனர். பின் பரமபதவாசலைக் கடந்த நம்பெருமாள் அஙகிருந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு நம்பெருமாளைப் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் பெரிய விழாவான பரம்பத வாசல் திறப்பில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

இந்த விழாவிற்க்காக திருச்சி மாநகர காவல் துறை தலைமையில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுந்தமாக வும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 26–ம் தேதி துவங்கியது.

அதன் பின் பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இன்று அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக நம்பெருமாள் கருவறையிலிருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்டுத் திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தை சுற்றி வந்து செர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் சென்றடைந்தார்.

பல்வேறு சிறப்பு கோயில்களில் பரமபத வாசல் திறப்பு

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திங்கட்கிழமை அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது .

இவ்விழாவில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் வாலாஜாபாத் கணேசன், கோவில் நிர்வாக அதிகாரிகள் தியாகராஜன், குமரன், வெள்ளைச்சாமி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறந்த உடன் பக்தர்கள் முண்டியடித்து செல்வதற்கு முற்பட்டனர். அப்போது கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு பத்தர்கள் குவிந்தனர். கோவிந்தா... கோவிந்தா... கோஷங்களுக்கு நடுவே பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பெரியாழ்வார் ஆண்டாள் இரண்டு ஆழ்வார்கள் வாழ்ந்த பூமியாகும். கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் அடிப்பூர தேரோட்டம் மிக முக்கியமான திருவிழாவாகும். அதற்கு அடுத்தபடியாக மார்கழி மாதம் தமிழ் திருவிழாவாகிய பகல் பத்து, இராப்பத்து மற்றும் ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15-ஆம் தேதி வரை ஆண்டாள் மார்கழி நீராட (எண்ணைக் காப்பு) உற்சவம் வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கடந்த டிசம்பர் 26-ம் தேதி தொடங்கி ஜனவரி 5-ஆம் தேதியுடன் பகல்பத்து உற்சவம் நிறைவடைந்தது. இந்நிலையில், இராப்பத்து உற்சவத்தின் ஆரம்ப நாளான இன்று வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் இன்று காலை 6:30 மணியளவில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. 

பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷங்களோடு, ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக பெரிய பெருமாள், தொடர்ந்து ஸ்ரீஆண்டாள், ரங்கமன்னார்' எழுந்தருளினர்.

சென்னை - திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கிருஷ்ணா கோஷம் எழுப்பி சொர்க்கவாசலை தாண்டி, பெருமாள் தரிசனம் செய்தனர்.