வைகுண்ட ஏகாதசி பெருவிழா- ஸ்ரீ ரங்கத்தில் நாளை சொர்க்க வாசல் திறப்பு

பதிவு செய்த நாள் : 05 ஜனவரி 2020 14:23

திருச்சி,

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய திருநாளான சொர்க்க வாசல், பரமபத வாசல் திறப்பு நாளை அதிகாலை நடைபெறவுள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் பெருமையை உடையது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்.

மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழா கடந்த டிசம்பர் 26-ம் தேதி தொடங்கியது.
இதைத் தொடர்ந்து பகல் பத்து திருநாள் டிசம்பர் 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நாட்களில் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி அர்ஜூன மண்டபத்துக்குச் சென்று நாள் முழுவதும் அங்கு பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
பகல் பத்து 10-ம் திருநாளான இன்று முக்கிய உற்சவங்களில் ஒன்றான மோகினி அலங்காரம் (நாச்சியார் திருக்கோலம்) நடைபெறவுள்ளது.
வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய உற்சவமான சொர்க்க வாசல் திறப்பு நாளை  அதிகாலை நடைபெறவுள்ளது. மூலஸ்தானத்திலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடும், அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பும் நடைபெற உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த வைணவத் தளங்கள், பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல், பரமபத வாசல் திறப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக கூடுதலாக போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.