ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டி – முதலமைச்சர் பழனிசாமி துவக்கிவைத்தார்

பதிவு செய்த நாள் : 04 ஜனவரி 2020 10:38

சென்னை

ஐஏஎஸ் -  ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் துவக்கி வைத்தார்.

சென்னை – மெரினா கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை ஐஏஎஸ் -  ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் கிரிக்கெட் பேட் பிடித்து விளையாட, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் காவல்துறை டிஜிபி திரிபாதி ஆகியோர் பந்து வீசினார்கள். இருவரும் மாறி மாறி வீசிய அனைத்து பந்துகளையும் முதலமைச்சர் பழனிசாமி அடித்து விளையாடினார்.

 பின்னர், ஐஏஎஸ் -  ஐபிஎஸ் அதிகாரிகளின் கிரிக்கெட் கேப்டன்களுடன் முதலமைச்சர் பழனிசாமி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக பேசிய முதலமைச்சர், உடல் ஆரோக்யம் இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம். உடல் ஆரோக்யத்துக்கு விளையாட்டு மிகவும் முக்கியம். பொதுமக்களும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அலுவலகங்களில் வேலைப் பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தை விளையாட்டு போக்குகிறது என முதலமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் க. சண்முகம், காவல்துறை டிஜிபி திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.