அண்ணாமலைக்கு அரோகரா! திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!

பதிவு செய்த நாள்

26
நவம்பர் 2015
06:58

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழாவில் 40 கி.மீ தூரம் வரை தெரியும் மகா தீபம் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனத்தை கண்டு வழிபட்டனர். 

திருவண்ணாமலைஅண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழாவில் முக்கிய திருவிழாவில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர், ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏகன் அனேகன் என்பதை விளக்கும் வகையில் அண்ணாமலையார் மூல கருவறையில் கற்பூரதீபமேற்றி, சிவாச்சாரியர்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் அண்ணாமலையார் மூல கருவறையில் எதிரில் ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு அதிகாலை 4மணிக்கு பரணி தீபமும் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து கணேச குருக்கள் பரணி தீபத்தை கையிலேந்தியவாறு எடுத்து சென்று இந்த சிவ-சக்தி மூர்த்தங்களிலிருந்து விரிவானதே எல்லா மூர்த்திகளும் என்பதனை காட்டுவதற்காக, பின்னர் அம்மன் கோவில் கருவறையில் ஐந்து அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள விநாயகர் சந்நதி உள்ளிட்ட அனைத்து சந்நதிகளிலும், தீபங்கள் ஏற்றப்பட்டன. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பரணி தீபம் தரிசனம் செய்து வழிபட்டனர்.

பின்னர் மாலை 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 6 மணிக்கு அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், ஆகியோர் தங்க கொடி மரத்தின் முன்பு தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது சரியாக 5.59 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி நடனமாடியவாறு பக்தர்களுக்கு ஒரு நிமிடம் காட்சியளித்தார். அப்போது காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தின் ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வந்து கொடிமரத்தின் முன்பாக உள்ள அகண்டத்தில்ஒன்று சேர்க்கப்பட்டது, பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு அவைகளை 2668 அடி உயர மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும்படி காண்பிக்கப்பட்டது. அப்போது மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம்11 நாட்கள் தொடர்ந்து எரியும், 40 கி.மீ தூரம் வரை தீபம் தெரியும், இதனால் 40 கி.மீ தூரம் வரை உள்ள பகுதி மக்கள் தீபத்தை கண்டு வழிபட்டனர்.அர்த்தநாரீஸ்வரர் ஆண்டில் ஒரு முறை மட்டுமே மகாதீபத்தன்று மட்டுமே கோவில் கொடி மரம் அருகே பலி பீடத்தின் அருகே வந்து காட்சி தந்துவிட்டு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும், கோவில் முதல் பிரகாரம் தங்க கொடிமரம், தீப தரிசன மண்டபம் என முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ளா காட்சியளித்தன.