கிறிஸ்துமஸ் திருநாள்: நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் வாழ்த்து

பதிவு செய்த நாள் : 25 டிசம்பர் 2019 10:27

புதுடில்லி,       

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25ம் தேதி), கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

குடியரசு தலைவர் வாழ்த்து

இந்நிலையில், இந்திய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு தன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

குடியரசு தலைவர் டுவிட்டரில்,”நாட்டு குடிமக்களுக்கும், குறிப்பாக இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் உள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும், கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இரக்கம், அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றின் மதிப்புகள் மீதான உறுதிப்பாட்டை புதுப்பிக்கவேண்டிய நாள் இது. இயேசு கிறிஸ்து நம் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வாழ ஆசிர்வதிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில்,”அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் உண்ணத எண்ணங்களை நாம் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறோம். சேவை மற்றும் இரக்கத்தின் மறு உருவாய் இருந்த அவர், மனிதர்களின் துயரத்தை துடைக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது போதனைகள், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளிக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில், “அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி வாழ்த்து

மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி டுவிட்டரில்,”கிறிஸ்தவர், இந்து, முஸ்லீம், சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கிறிஸ்துமஸ் பண்டிகை அனைவருக்குமானது. அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுவவதே மேற்குவங்க மாநிலத்தின் தனி சிறப்பு. இந்நாள், அமைதி, மகிழ்ச்சியை அனைத்து இடங்களுக்கும் பரவச் செய்யட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.