கிறிஸ்துமஸ் திருநாள்- ராமதாஸ் வாழ்த்து

பதிவு செய்த நாள் : 24 டிசம்பர் 2019 14:53

சென்னை,

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு மக்களுக்கு ராமதாஸ் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் இன்று விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், 

வாழ்க்கைப் பாடங்கள் அனைத்தையும் உலகிற்கு போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களிடம் மட்டும் அன்பு காட்டினால் போதாது. எதிரிகளிடமும் அன்பு காட்ட வேண்டும். மனதார மன்னிக்க வேண்டும். யாராவது உங்கள்மேல் கோபமாக இருந்தால், உடனடியாக அவரிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதேபோல் நீங்கள் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டுமென போதித்தவர் இயேசுபிரான்.

இயேசுபிரான் பிறந்த இடம் ஏழ்மையின் அடையாளம் என்றாலும் கூட, பின்னாளில் அவர் போதித்த போதனைகளும், அவரது வாழ்க்கை நமக்கு உணர்த்திய பாடங்களும் உயர்வின் உச்சங்கள் ஆகும். தமது போதனைகளுக்கு தாமே எடுத்துக்காட்டாக தமது வாழ்க்கையை வாழ்ந்த மகான் இயேசுநாதர்.

இயேசுபிரானின் போதனைகளுக்கு நிகழ்கால உதாரணமாக வாழ்வது தான் அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும். நாட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்; போட்டி பொறாமைகள் அகல வேண்டும்; ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் ஆகும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ராமதாஸ்  கூறியுள்ளார்.