கிறிஸ்துமஸ் பண்டிகை: ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

பதிவு செய்த நாள் : 24 டிசம்பர் 2019 12:50

சென்னை,

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளூநர் வாழ்த்து

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

கிறிஸ்துமஸ் பண்டிகையானது ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது, விட்டுக்கொடுத்து வாழ்வது போன்ற உயரிய நெறிகளை பயிற்றுவிப்பது மட்டுமின்றி குடும்ப உறவுகள், நண்பர்கள் யாவருடனும் நல்லறவு கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்திட வழிகாட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சந்தோசம், செழிப்பு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று வாழ்த்துவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.

முதலமைச்சர் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

இயேசுபிரான் அவதரித்த இத்திருநாளில், அத்திருமகனார் போதித்த, அன்பு வழியை மக்கள் அனைவரும் பின்பற்றி, வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகில் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்கிட வேண்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.