இந்தியா - மே.இ. தீவு இடையே 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 316 ரன்கள் இலக்கு

பதிவு செய்த நாள் : 22 டிசம்பர் 2019 17:35

கட்டாக்,

இந்தியாவுடனான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து இந்திய அணிக்கு 316 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான தொடரைத் தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான எவின் லீவிஸ் மற்றும் ஷை ஹோப் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில் லீவிஸ் முதல் விக்கெட்டாக 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஹோப்பும் 42 ரன்களுக்கு முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ராஸ்டன் சேஸ் மற்றும் ஷிம்ரோன் ஹெத்மயர் ஆகியோர் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இந்த இணையும் 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்களைக் கடந்தது. சேஸ் 48 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.

144 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான நிலையில் இருந்த மேற்கிந்தியத் தீவுகளை சரிவில் இருந்து மீட்க நிகோலஸ் பூரானும், கேப்டன் கைரன் போலார்டும் இணைந்தனர். இந்தக் கூட்டணி தொடக்கத்தில் சற்று நிதானமாக விளையாடியது. இதனால், மேற்கிந்தியத் தீவுகளின் ரன் வேகமும் சீராக இருந்து வந்தது.

பூரான் 43 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதைத் தொடர்ந்து 5-வது விக்கெட் பாட்னர்ஷிப்பும்  83 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தது. இதனால், இந்தியக் கேப்டன் விராட் கோலிக்கு நெருக்கடி அதிகரித்தது.

அரைசதம் அடித்த பூரான் 48-வது ஓவரில் ஷர்துல் தாகுர் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 64 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார்.

கேப்டன் போலார்ட் 44 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து அவர் மேற்கிந்தியத் தீவுகளின் அணி 300 ரன்களைக் கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்தது.

போலார்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர் உட்பட 74 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் அறிமுக நாயகனான நவ்தீப் சைனி முதலில் ஷிம்ரோன் ஹெத்மயர் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் 33 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து சேஸ் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இந்திய அணித் தரப்பில் சைனி 2 விக்கெட்டுகளையும், தாகுர், ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.