ஹெட்மயரிடம் வீழ்ந்தது இந்தியா : 8 விக்கெட்டில் விண்டீஸ் வெற்றி

பதிவு செய்த நாள் : 16 டிசம்பர் 2019 01:05


சென்னை:

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஓருநாள் போட்டியில் ஹெட்மயர் (139), ஹோப் (102*) கைகொடுக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி 3 ‘டுவென்டி&20’ மற்றும் 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. முதலில் நடந்த ‘டுவென்டி&20’ தொடரை இந்தியா 2&1 என கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் ஓருநாள் தொடர் நேற்று துவங்கியது. இதன் முதலாவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ‘டாஸ்’ வென்ற வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் போலார்டு முதலில் ‘பவுலிங்கை’ தேர்வு செய்தார். இந்திய அணியில் மயங்க் அகர்வால், மணிஷ் பாண்டே, சகால், ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படவில்லை. அதே நேரம் ‘ஆல்&ரவுண்டர்’ ஷிவம் துபே அறிமுக வாய்ப்பு பெற்றார். போட்டிக்கு முன்னர் இருநாட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டது. இரு கேப்டன்களும் இந்த தொடருக்கான கோப்பைக்கு முன் போஸ் கொடுத்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின் சென்னையில் இந்தியா&வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. தவிர, வருணபகவான் கைகோடுக்க குறித்த நேரத்தில் ஆட்டம் துவங்கியதோடு மைதானம் ‘ஹவுஸ்புல்லாக’ காட்சியளித்தது.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ராகுல் இருவரும் துவக்கம் தந்தனர். கார்ட்ரல் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவர் மெய்டினாக அமைந்தது. தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய கார்ட்ரல் தனது ஐந்தாவது ஓவரில் ராகுல் (6) விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த கேப்டன் விராத் கோஹ்லி, பவுண்டரியுடன் கணக்கை துவக்கினார். இருந்தும் இவர் 4 ரன் மட்டுமே எடுத்த நிலையில் கார்ட்ரல் பந்தில் ‘ஸ்டெம்புகள் சிதற’ போல்டாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறப்பாக விளையாடி வந்த ரேகித் (36) ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன் எடுத்து திணறியது. இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருடன் இளம் வீரர் ரிஷாப் பன்ட் இணைந்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். குறிப்பாக, ரிஷாப் பன்ட் துவக்கம் முதலே வெஸ்ட்இண்டீஸ் பந்து வீச்சை நாலா புறமும் பறக்கச் செய்தார். இதையடுத்து ஸ்கோர் ‘ராக்கெட்’ வேகத்தில் பறந்ததோடு சரிவிலிருந்து மீளத் துவங்கியது.

இதையடுத்து இந்திய அணி 25வது ஓவரில் 100 ரன் கடந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 70 பந்தில் அரைசதம் கடந்தார். அதே நேரம் ரிஷாப் பன்ட் 49 பந்தில் அரைசதம் அடிக்க அரங்கமே அதிர்ந்தது. இந்த ஜோடியை பிரிக்க வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் போலார்டு 7 பவுர்களை பயன்படுத்தினா. கடைசியாக இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்த நிலையில், ஜோசப் பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 70 ரன் (88 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ரிஷாப் பன்ட்டும் வெளியேற விண்டீஸ் பக்கம் ஆட்டம் திரும்பியது. ரிஷாப் பன்ட் 71 ரன் (69 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். முக்கிய கட்டத்தில் கேதர் ஜாதவுடன் ஜடேஜா இணைந்தார். இருவரும் அசத்தலாக விளையாட ஆட்டம் மீண்டும் சூடுபிடித்தது.

அதிரடியாக விளையாடி வந்த கேதர் ஜாதவ் (40) அரைசத வாய்ப்பை தவறவிட்டார். ஜடேஜா (21) பரிதாபமாக ரன் அவுட் ஆனார். கீமோ பால் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஷிவம் துபே (9) வெளியேற இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்தது. தீபக் சகார் (6), முகமது ஷமி (0) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் கார்ட்ரல், கீமோ பால், ஜோசப் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. தீபக் சகார் வேகத்தில் அம்ரீஷ் (9) நடையை கட்டினார். பின் ஹோப்புடன் ஹெட்மயர் இணைந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் எடுத்து வந்தனர். அதிரடியாக விளையாடிய ஹெட்மயர் 50 பந்தில் அரைசதம் கடந்தார்.22வது ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் 100 ரன் எடுத்தது. பொறுப்புடன் விளையாடி வந்த ஹோப், 92 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க இந்திய கேப்டன் கோஹ்லி மேற்கொண்ட முயற்சிகள் பலனலிக்கவில்லை. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட்மயர் ஒருநாள் போட்டியில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இவர் 85 பந்தில் சதம் விளாசினார். 36வது ஓவரில் விண்டீஸ் 200 ரன் கடந்த போது இந்தியாவின் தோல்வி உறுதியானது.

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 218 ரன்கள் சேர்த்த நிலையில், முகமது ஷமி வேகத்தில் ஹெட்மயர் சரிந்தார். இவர் 139 ரன் (106 பந்து, 11 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்தார். அடுத்து நிகோலஸ் பூரன் களம் வந்தார். இந்த நிலையில், எழுச்சியுடன் விளையாடிய ஹோப், 149 பந்தில் சதம் அடித்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் இவரது 3வது சதமாக அமைந்தது. முடிவில் வெஸ்ட்ண்டீஸ் அணி 47.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹோப் 102 (151 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), நிகோலஸ பூரன் (29) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய தரப்பில் தீபக் சகார், முகமது ஷமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் வெஸ்ட்இண்டீஸ் 1&0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் 18ம் தேதி நடக்க உள்ளது.

மைதானத்தில் புகுந்த நாய்

இந்தியா - விண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்து. இப்போட்டியில் முதலில் இ;ந்திய அணி பேட்டிங் செய்தது. 27வது ஓவர் துவங்கும் முன், மைதானத்துக்குள் நாய் ஒன்று புகுந்து களேபரம் செய்தது. ஊழியர்கள் நாயை விரட்ட போராட, அவர்கள் கையில் சிக்காமல் நாய் போக்கு காட்டி ஓடியது. ஒருவழியாக நாயை மைதானத்திலிருந்து விரட்டியபின், போட்டி மீண்டும் துவங்கியது. இ;ந்த நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ஊழியர்கள் நாயை விரட்டிய காட்சியை ரசிகர்கள் ரசித்தனர்.