குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டாம்: மம்தா எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019 18:45

கொல்கட்டா,

குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் ஜனநாயக முறைப்படி மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும், மீறி போராட்டம் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.  இதற்கு  ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து சட்டமாகியுள்ளது. ஆனால் இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வங்க தேசத்தவரின் ஊடுருவலுக்கு எதிராக அசாம் மக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் எண்ணுகின்றனர். அசாம் மாநிலத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் வங்கதேச இந்து அகதிகள் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 அசாம் மற்றும் திரிபுராவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் டயர்களை கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. பல்வேறு மாணவர் அமைப்புகளும் இந்த போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளன.அசாம் மட்டுமின்றி மேற்குவங்கத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் ரயில் நிலையத்துக்கு தீ வைப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களும் நடந்தன

முர்சிதாபாத், வடக்கு 24 பர்கானா மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. சாலைகள் மறிக்கப்பட்டன. ஹவுரா மாவட்டம் டொம்ஜூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் டயர்களை கொளுத்தி மறியல் போராட்டம் நடத்தினார்கள்..  இந்த வன்முறை சம்பவங்களுக்கு மேற்கு வங்க   மாநில  முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மக்கள் ஜனநாயக முறைப்படி மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும். அதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் சட்டத்தை கையில் எடுத்து போராட்டம் நடத்த யாருக்கும் உரிமையில்லை. பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு  முதலமைச்சர் மம்தா பானர்ஜி  கூறினார்.