சிரோமணி அகாலி தளம் கட்சியின் 99ம் ஆண்டு துவக்க நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019 17:39

புதுடில்லி

சிரோமணி அகாலி தளம் கட்சியின் 99ம் ஆண்டு துவக்க நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிரோமணி அகாலி தளம் கட்சி, கடந்த 1920ம் ஆண்டு பஞ்சாப்பில் நிறுவப்பட்டது. இந்த கட்சியின் கீழ் தான், சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியும், டில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டியும் இயங்கி வருகின்றன. சீக்கியர்களுக்கு அதிகாரம் கிடைக்கவேண்டும் என்று குரல் கொடுத்து தொடங்கப்பட்ட அந்த கட்சி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகின்றது.

பிரதமர் மோடி வாழ்த்து

சிரோமணி அகாலி தளம் கட்சியின் 99வது ஆண்டு துவக்க நாள் இன்று அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அக்கட்சியினருக்கு, பிரதமர் நரேந்திர மோடி தன் வாழ்த்துக்களை இன்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டரில்,

”அகாலி தளம் கட்சியின் 99ம் ஆண்டு துவக்க நாளான இன்று, அக்கட்சியின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் பழமையான கட்சிகளில் ஒன்றான அகாலி தளம், சமூகத்திற்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறது. பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றது” என்று பதிவிட்டுள்ளார்.

மீண்டும் தலைவரானார் சுக்பீர் பாதல்

இன்று சிரோமணி அகாலிதளம் கட்சியின் கூட்டம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள தேஜ சிங் சாமுந்திரி ஹாலில் இன்று நடைபெற்றது. அதில் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை கட்சியின் மூத்த தலைவர்கள் தோடா சிங்கும், பிரேம் சிங் சந்துமாஜ்ரா ஆகியோர் முன்மொழிந்தனர். இதர உறுப்பினர்கள் அனைவரும் அவரது பெயரை வழிமொழிந்தனர்.

சுக்பீர் சிங் பாதல், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதலில் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.