1000 கோடி ஊழல் - ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டு உண்மை அல்ல – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மறுப்பு

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019 14:52

சென்னை

சென்னை மாநகராட்சியில் ஆற்று மணலுக்குப் பதில் எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த குற்றச்சாட்டு உண்மை அல்ல என தமிழ்நாடு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கப்பட்ட வடிவம்:

பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுமான பணிகளில்  M-sandஐ பயன்படுத்திவிட்டு, ஆற்று மணலை பயன்படுத்தியது போல விலைப்புள்ளியை வழங்கியதாக  உண்மைக்கு முற்றிலும் புறம்பான செய்தியை  திமுக ஆதரவு பெற்ற இயக்கம் ஒன்று  அறிக்கை வெளியிட்டது.

இந்த திரிக்கப்பட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு தான், எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

திமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறையினை தன் பொறுப்பில் வைத்திருந்த மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய பணி என்ன?

தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்த போதும் அவர் ஆற்றிய பணிகள் என்ன ?

முதலில் சென்னை மாநகராட்சியில் பணிகள் ஏதும் நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஸ்டாலின். ஆனால், சென்னை மாநகரில் வார்டுகள் தோறும் சிறப்பாக நடைபெற்று வரும் பணிகளை மக்கள் நேரில் பார்த்து,  உணர்ந்திருக்கின்ற காரணத்தால், இந்த புளுகு எடுபடாது என்று சொல்லி, ஜமக்காளத்தில் வடிக்கட்டிய  வேறொரு புளுகை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

ஆனால், நம்மைக் குற்றம் சொல்லப்போய், சென்னை மாநகராட்சியில்,  உள்ளாட்சித் துறை மூலம் நடக்கும் எண்ணற்ற பணிகள் பற்றி அவரையும் அறியாமல் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருக்கின்றார் மு.க. ஸ்டாலின்.

                மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள்

                நடைபாதை அமைக்கும்  திட்டப் பணிகள்

                ஸ்மார்ட் சிட்டி தொடர்பான பணிகள்

                உலக வங்கி உதவியுடன் நடக்கும் திட்டங்கள்

என்று இந்த அரசு ஆற்றிவரும் பணிகளையும், செயல்படுத்தும் திட்டங்களையும் பட்டியலிட்டுக் காட்ட வேண்டிய  நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டிருக்கிறார்.

ஆனால், அந்தப் பணிகளில் ஆற்று மணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுத்துவிட்டு எம்-சாண்ட் பயன்படுத்துவதாகவும்,  1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது எனும் நஞ்சைக் கக்கி இருக்கிறார் ஸ்டாலின்.

ஏதேனும் தவறு செய்துவிட்டு, அதுபற்றி மக்கள் கேட்டால், உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறுவது ஸ்டாலினின் வழக்கம். தேர்தல் கூட்டணி அமைக்க  கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பணம் கொடுத்த நிகழ்வில் அப்படித்தான் சொன்னார் ஸ்டாலின்.

ஆனால், மாண்புமிகு அம்மா அவர்கள் எங்களுக்கு அப்படி கற்றுக் கொடுக்கவில்லை.  மக்கள் தான் எங்கள் எஜமானர்கள். அவர்களுக்கு பதில் சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.  எதிர்க்கட்சிகள் நம் மீது பொய்க் குற்றம் சாடும்போது, அது பற்றிய உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது நமது கடமை என்கிற பாடத்தை அம்மா அவர்கள் எங்களுக்கு கற்றுத் கொடுத்திருக்கிறார்.

அம்மா அவர்கள் எங்களுக்கு வழிகாட்டியுள்ளபடி, ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை எப்படி அடித்தளமே இல்லாத ஒரு குற்றச்சாட்டு, என்பதையும், அவரது அறிக்கையில் உண்மை என்பது ஒரு துளி அளவும் இல்லை என்பதையும், எத்தகைய காழ்ப்புணர்ச்சியுடன் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியது எங்களது கடமை என்ற வகையில், இதற்கான முழு விளக்கத்தையும் மக்கள் முன் வைக்கிறேன்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள், தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற  ஒப்பந்தப்புள்ளி (Tamil Nadu Tender Transparency Act)  சட்டத்தின்படி முறையாக ஆன்லைன் மூலம் கோரப்பட்டு, விதிகளுக்குட்பட்டு ஒப்பந்த புள்ளிகள் முடிவு செய்யப்படுகின்றன.

அவ்வாறு முடிவு செய்யப்பட்டு, கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 ஆண்டுகளில், ஆற்று மணல் அல்லது M-Sand  கலந்த சிமெண்ட் கலவைகள் கொண்டு ரூ.1164.85 கோடிக்கு பல பணிகள்   மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது குறித்து சற்று விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால்,  

ரூ.102.35 கோடி அளவுக்கு உட்புற கான்கீரிட் சாலைகளும்,

ரூ.65.18 கோடி மதிப்பீட்டில் நடைபாதை பணிகளும்,

ரூ.699.64 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகளும்,

ரூ.145.95 கோடி மதிப்பீட்டில் கட்டடப் பணிகளும்,

ரூ.144.69 கோடியில் ஸ்மார்ட் சிட்டி - சீர்மிகு நகரப்பணிகளும்,

ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் பாலப்பணிகளும், 2017-18ஆம் ஆண்டு முதல் நடப்பு மாதம் வரை மொத்தம் ரூ.1164.85 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு, நடைபெற்ற ரூ.1164.85 கோடி பணிகளில், மணல் சேர்த்து செய்யப்படும் கான்கிரீட் பணிகள்   33 சதவிகிதமே ஆகும்.   இதன் மதிப்பீடு ரூ.384.04 கோடி மட்டுமே ஆகும்.  இந்த கான்கிரீட் பணிகளில் கலக்கப்படும் M-Sand அல்லது ஆற்று மணலின் அளவு  வெறும் 8.5 சதவிகிதம் மட்டுமே ஆகும்.  அதாவது,  ரூ.32.67 கோடி  அளவிலான கான்கிரீட் பணிக்கு மட்டுமே M-Sand அல்லது ஆற்று மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

செயல்படுத்தப்படும் பணிகளின் மதிப்பே வெறும் ரூ.32.67 கோடி தான்  என்னும் போது, அதில் ஏதோ ரூ.1000 கோடி முறைகேடு நடந்து விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது எவ்வளவு கடைந்தெடுத்த பொய்.

ஆற்று மணலைவிட, எம்-சாண்ட் விலை நூற்றுக்கு 50 சதவீதம் குறைவு என்று, ஸ்டாலின், அந்த அறிக்கையில் அள்ளி விட்டிருக்கிறார்.

2017ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம்,  மாநிலம் முழுவதும் உள்ள ஆற்று மணல்  குவாரிகளை மூடுமாறு உத்திரவிட்டது.  மாண்புமிகு உயர்நீதிமன்றம் கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளில் மணலைப் பயன்படுத்தத்தக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தியது.

இவ்வாறு ஆற்று மணல் குவாரிகள் மூடப்படும் சூழ்நிலையில், ஆற்றுமணல் இல்லாத காரணத்தால்,  தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்  உட்கட்டமைப்பு பணிகள்  தடைப்பட்டுவிடக் கூடாது என்பதனைக் கருத்தில் கொண்டு, ஆற்று மணலைப் போன்ற தரம் கொண்ட M-Sand -ஐ பயன்படுத்தி பணிகளை தொடர வேண்டுமென்று தமிழக அரசு அனைத்து  துறைகளுக்கும் அறிவுறுத்தியது.

மேலும், கான்கிரீட் தயாரிக்கும் பணிகளில், ஆற்று மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், M-Sand -ஐ பயன்படுத்தலாம் என்று பொதுப்பணித் துறையின் மூலம் ஆணை வெளியிடப்பட்டது. 

இந்த எம்-சாண்டின் விலை தான் ஆற்று மணலைவிட நூற்றுக்கு 50 சதவீதம் குறைவு என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

பொதுப்பணித்துறையானது, ஒவ்வொரு வருடமும் திட்டப் பணிகளுக்கு தேவைப்படும் பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிடும். அவ்வாறு ஆண்டுதோறும் பொதுப்பணித்துறை அளித்துள்ள  M-Sand மற்றும்  ஆற்று மணல் விலைப்பட்டியலை ஒப்பீட்டுப் பார்த்தால், எது விலைஅதிகம், எது விலை குறைவு என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

எம்-சாண்டின் விலை, 2017-18 ஆம் ஆண்டில் ஒரு கன  மீட்டருக்கு ரூ.434.29 ஆகவும்,  அதே நேரத்தில் ஆற்று மணலின் விலை ரூ.168.00 ஆகவும் இருக்கிறது.

அதேபோல,   2018-19 ஆம் ஆண்டில், எம்-சாண்ட் ரூ.777 ஆகவும்,  ஆற்று மணலின் விலை ரூ.168 ஆகவும், 

2018-19ல் எம்-சாண்ட் ரூ.1250 ஆகவும்,  ஆற்று மணலின் விலை ரூ.447 ஆகவும், இருந்தது.

இதன்படி, கடந்த 2017லிருந்து 2018 வரை எல்லா காலகட்டங்களிலுமே M-Sand - விலை ஆற்று மணலை விட மிக அதிகமாகவே பொதுப்பணித் துறையின் விலை பட்டியலில்  உள்ளது.   இதனையே தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் பின்பற்றுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு அலுவலக விலைப் பட்டியலைவிட கூடுதலாக 10  முதல் 30 சதவீதம் வரை தற்போது வழங்குவதாக புகார் கூறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

இது ஒப்பந்த நடைமுறைகளிலும், அதனைத் செயல்படுத்தும் வழிமுறைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான் என்று மு.க.ஸ்டாலினுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது.

ஒப்பந்தப் பணிக்குத் தேவையான பொருட்களின் விலை உயர்வு,  கால தாமதம் முதலான காரணங்களால், ஒப்பந்ததாரர்களின் கோரிக்கையை ஏற்று அதில் நியாயம்  இருக்கிறதா என ஆய்வு செய்து, அக்கோரிக்கை நியாயமானது என அறியும் பட்சத்தில் விலை உயர்வது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான்.

திமுக ஆட்சி காலத்திலேயே 2008ம் ஆண்டில் நடைபெற்ற கட்டடத் துறை பணிகளுக்கு 10 முதல் 45 சதவீதம் வரையிலும், தகன மேடை அமைப்பதற்கான பணிகளுக்கு 65 சதவீதம் வரை கூடுதலாகவும் வழங்கப்பட்டது.  

·     திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பாலப் பணிகளுக்கு 35 முதல் 73 சதவீதம் வரை கூடுதலாக வழங்கப்பட்டது.

·    1999ம் ஆண்டு நடைபெற்ற சாலைப் பணிகளுக்கு 42 சதவீதமும்,

·    2008ம் ஆண்டு நடைபெற்ற மின்துறை பணிகளுக்கு 24 சதவீதமும்,  பூங்கா பணிகளுக்கு 38 சதவீதம் வரையிலும் கூடுதலாக வழங்கப்பட்டது.

இதற்கான ஆதாரங்கள் முழுமையாக பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தற்போது உள்ளது. எதற்கெடுத்தாலும், உள்ளாட்சித் துறை  அமைச்சர் என்ற முறையில் என்னை குற்றம் சொல்லும் மு.க. ஸ்டாலின்,  அவர் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும்  பதவி வகித்தபோது,  திட்டப் பணிகளை செயல்படுத்த மதிப்பீட்டினை விட அதிகமான சதவீதத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கப்பட்டதற்கு, அவர் தான் காரணமா?  இதற்கு மு.க.ஸ்டாலின் என்ன கூறப்போகிறார்.

இவ்வாறு, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையின் நகல் முழுவதையும் பார்வையிட கீழே சொடுக்கவும்.