உத்தரபிரதேசத்தில் இளம்பெண் கடத்திக் கற்பழிப்பு! குற்றவாளிகள் கைது

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019 13:00

முசாபர்நகர்

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் இளம்பெண் ஒருவர் 2 நபர்களால் கடத்தி கற்பழிப்பு செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் பல கற்பழிப்பு சம்பவங்கள் சமீப காலமாக நடந்து வருகின்றன.
உத்தரபிரதேச மாநில முசாபர்நகரில் நேற்று  முன்தினம் (டிசம்பர் 12ம் தேதி) இளம்பெண் ஒருவர் கடைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது தந்தை அச்சமடைந்தார். பின்னர், காவல்துறையினரிடம் தகவல் கொடுத்துள்ளார்.
காவல்துறையினர், அதுகுறித்து விசாரித்து அந்த இளம்பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்றைய தினம், அந்த பெண் மீட்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணை இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. அந்த குற்றச் செயலில் ஈடுபட்ட சல்மான் மற்றும் பர்வேஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது என்று மாநில எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.