முட்டை அரசியல்

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2019

மத்­திய பிர­தே­சத்­தில் அங்­கன்­வா­டி­யில் முட்டை வழங்க போவ­தாக தெரிந்­த­வு­டன் இளம் தாயான ராமாக்சி சவு­ருக்­கும், அவ­ரது நான்கு வயது மகன் சாக­ரின் முகத்­தில் மகிழ்ச்சி தெரிந்­தது. “அவ­னுக்கு முட்டை பிடிக்­கும். அவன் முட்டை சாப்­பி­டு­வதை விரும்­பு­கின்­றோம்” என்று ராமாக்சி சவுர் கூறு­கின்­றார். சாக­ரின் முகம் மலர்­கி­றது.மத்­திய பிர­தே­சம், நிவாரி மாவட்­டத்­தில் உள்ள பஞ்­ச­புரா மஜிரா என்ற இடத்­தில் உள்ள பழங்­குடி வகுப்­பைச் சேர்ந்­த­வர் ராமாக்சி சவுர். இவ­ரது அண்டை வீட்­டுக்­கா­ரர் ஹரி­ராம் சவுர், “அங்­கன்­வா­டி­யில் முட்டை வழங்­கு­வ­தில் என்ன பிரச்னை? முட்­டை­யின் சுவை தெரி­யும்” என்­கின்­றார்.

மத்­திய பிர­தே­சத்­தில் 17 மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 1 லட்­சத்து 14 ஆயி­ரம் பேர், அங்­கான்­வா­டி­க­ளில் பரி­மா­றப்­ப­டும் உண­வில் முட்­டையை சேர்க்க வேண்­டும் என்­றும், உணவு பாது­காப்­பிற்­கான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று கையெ­ழுத்­திட்டு மனு அளித்­துள்­ள­னர். ‘உண­வுக்­கான உரிமை இயக்­கம்’ (Right to Food Campiagn), அங்­கன்­வாடி மையங்­க­ளில் முட்டை கொடுக்க வேண்­டும் என்று கையெ­ழுத்து இயக்­கத்தை நடத்­தி­யுள்­ளது. “இந்த மனுவை முத­ல­மைச்­ச­ரின் அலு­வ­ல­கத்­தில் ஒப்­ப­டைத்­துள்­ளோம்” என்று உண­வுக்­கான உரிமை இயக்­கத்­தைச் சேர்ந்த சச்­சின் ஜெயின் தெரி­வித்­தார்.

மத்­திய பிர­தே­சத்தை ஆளும் காங்­கி­ரஸ் அரசு, அடுத்த நிதி­யாண்டு முதல் (ஏப்­ரல்) பழங்­குடி மக்­கள் அதி­கம் வாழும் 89 மண்­ட­லங்­க­ளில் உள்ள அங்­கன்­வா­டி­க­ளில் முட்டை விநி­யோ­கிக்க முடிவு செய்­துள்­ளது. மாநில அர­சின் நட­வ­டிக்­கைக்கு ஆத­ரவு தெரி­விக்­கும் வித­மாக, 1 லட்­சத்து 14 ஆயி­ரம் பேர் கையொப்­பம் இட்டு மனுவை சமர்ப்­பித்­துள்­ள­னர். அதே நேரத்­தில் எதிர்­கட்­சி­யாக உள்ள பார­திய ஜனதா, அங்­கன்­வா­டி­க­ளில் முட்டை விநி­யோ­கிப்­ப­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து வரு­கி­றது. “குழந்­தை­களை முட்டை சாப்­பிட வைப்­பது இந்­திய கலாச்­சா­ரத்­திற்கு எதி­ரா­னது என்­றும், இதற்கு எதிர்ப்பு தெரி­விப்­போம்” என்று பா.ஜ., அறி­வித்­துள்­ளது.

முந்­தைய பார­திய ஜனதா அர­சில் முதல்­வ­ராக இருந்த சிவ­ராஜ் சிங் சௌகான், 2015ல் அங்­கன்­வா­டி­க­ளில் முட்டை வழங்­கும் யோச­னையை தடுத்து நிறுத்­தி­னார். அப்­போது சிவ­ராஜ் சிங் சவு­கான், நான் முத­ல­மைச்­ச­ராக இருக்­கும் வரை அங்­கன்­வா­டி­க­ளில் முட்டை வழங்­கப்­ப­டாது என்று அறி­வித்­தார். பா.ஜ.,தேசிய பொதுச் செய­லா­ளர் கைலாஷ் விஜ­ய­வர்­கியா, முட்டை வழங்­கு­வதை பா.ஜ., கடு­மை­யாக எதிர்க்­கும் என்று கூறி­யுள்­ளார். இதற்­கும் மேல் ஒரு படி மேலே சென்று மத்­திய பிர­தேச சட்­ட­சபை எதிர்­கட்சி தலை­வ­ரான பா.ஜ.,வைச் சேர்ந்த கோபால் பர்­கவா, “குழந்­தை­க­ளுக்கு முட்டை சாப்­பிட வைப்­பது, அவர்­கள் பெரி­ய­வர்­கள் ஆன பிறகு அவர்­களை மனித மாமி­சத்தை தின்­ப­வர்­க­ளாக ஆக்­கி­வி­டும்” என்று எச்­ச­ரித்­துள்­ளார்.

சத்­திஸ்­கர் மாநில காங்­கி­ரஸ் அரசு சில மாதங்­க­ளுக்கு முன் முட்டை வழங்­கும் முடிவை எடுத்­தது. அங்­கும் இதே போல் எதிர்ப்­பு­கள் கிளம்­பின. ஆனால் சத்­திஸ்­கர் காங்­கி­ரஸ் முதல்­வர் பூபேஷ் பாகல் அரசு முட்டை வழங்­கு­வ­தில் உறு­தி­யாக இருந்­தது. தமிழ்­நாடு, ஜார்­கண்ட், கர்­நா­டகா, பீகார் உட்­பட பல மாநி­லங்­க­ளில் பள்­ளி­க­ளில் மதிய உணவு திட்­டத்­தில் முட்டை வழங்­கப்­ப­டு­கி­றது. இதில் கர்­நா­ட­கா­வில் பா.ஜ., ஆட்சி நடை­பெ­று­கி­றது. பீகா­ரில் பா.ஜ.,கூட்­டணி ஆட்சி நடை­பெ­று­கி­றது. ஜார்­கண்ட்­டில் பா.ஜ., ஆட்சி நடை­பெற்­றது. இப்­போது இந்த மாநில சட்­ட­சபை தேர்­தல்­கள் நடந்து கொண்­டுள்­ளன.

மத்­திய பிர­தேச பெண்­கள் மற்­றும் குழந்­தை­கள் மேம்­பாட்டு துறை அமைச்­சர் இம்­ராதி தேவி கூறு­கை­யில், “பார­திய ஜனதா சொல்­வதை பற்றி நாங்­கள் ஏன் கவ­லைப்­பட வேண்­டும்? நமது குழந்­தை­க­ளுக்கு சத்து கிடைத்­தால், குழந்­தை­க­ளின் ஊட்­டச்­சத்து பற்­றாக்­குறை போகும் எனில், அவர்­க­ளுக்கு முட்டை கொடுப்­போமே. நாங்­கள் யாரை­யும் முட்டை சாப்­பிட நிர்ப்­பந்­தம் செய்­ய­வில்லை. எந்த குழந்தை முட்டை சாப்­பி­டுமோ, அவர்­க­ளுக்கு மட்­டும் கொடுப்­போம். மற்­ற­வர்­க­ளுக்கு வேறு­வி­த­மான உணவு வழங்­கு­வோம். நமது வீட்­டில் அசைவ உணவு சமைக்­கும் போது, யாருக்­கா­வது பிடிக்­கா­விட்­டால், அவர்­க­ளுக்கு வேறு உணவு சமைப்­ப­தில்­லையா? நமது குழந்­தை­கள் ஆரோக்­கி­ய­மா­ன­வர்­க­ளாக இருக்க வேண்­டும். அவர்­கள் ஆரோக்­கி­ய­மா­ன­வர்­க­ளாக வள­ர­வேண்­டும்” என்று கூறி­னார்.

மத்­தி­ய­பி­ர­தேச பெண்­கள் மற்­றும் குழந்­தை­கள் நலத்­துறை முதன்­மைச் செய­லா­ளர் அனு­பம் ராஜன், “இது பற்றி சமீ­பத்­தில் நடை­பெற்ற ஆய்­வுக் கூட்­டத்­தில் முத­ல­மைச்­சர் கமல்­நாத் முன்­னி­லை­யில் அங்­கன்­வா­டி­க­ளில் முட்டை வழங்­கு­வது பற்றி ஆலோ­சித்­தோம். பழங்­குடி மக்­கள் வாழும் 89 மண்­ட­லங்­க­ளில் முட்டை வழங்க தேவை­யான நட­வ­டிக்கை எடுப்­பது என முடிவு செய்­யப்­பட்­டது. ஊட்­டச்­சத்து குறை­பாட்டை போக்­கு­வ­தில் முட்­டைக்கு உள்ள பங்கு பற்றி நன்கு தெரி­யும். பழங்­குடி மக்­கள் வாழும் பகு­தி­க­ளில் ஊட்­டச்­சத்து குறை­பாடு சரா­சரி அளவை விட அதி­க­மாக உள்­ளது. பழங்­குடி மக்­கள் முட்டை சாப்­பி­டு­கின்­ற­னர். வாரத்­திற்கு மூன்று முறை முட்டை வழங்க வரு­டத்­திற்கு ரூ.113 கோடி செல­வா­கும் என்று தெரி­வித்­தார்.

அவர் மேலும் கூறு­கை­யில், “அங்­கன்­வாடி மையங்­க­ளில் முட்டை வழங்­கு­வ­தால் உள்­ளூ­ரில் கோழி வளர்த்து, முட்டை வழங்­கு­ப­வர்­க­ளுக்கு வரு­வாய் கிடைக்­கும். பள்­ளிக்­கூ­டங்­க­ளில் மதிய உணவு திட்­டத்­தில் குறிப்­பாக பதின்­மர் இளம் பெண்­கள் படிக்­கும் பள்­ளிக்­கூ­டங்­க­ளில் முட்­டை­யும் சேர்க்­கப்­ப­டும்” என்று தெரி­வித்­தார்.

அங்­கன்­வா­டி­க­ளில், மதிய உணவு திட்­டத்­தில் முட்டை வழங்­கு­வ­தற்கு ஊட்­டச்­சத்து நிபு­ணர்­கள் மத்­தி­யில் மட்­டு­மல்­லாது, மக்­கள் மத்­தி­யி­லும் நல்ல வர­வேற்பு இருப்­பதை கையெ­ழுத்து இயக்­கமே எடுத்­துக் காட்­டு­வ­தாக உள்­ளது. “பழங்­குடி மக்­க­ளும், கிரா­மப்­பு­றங்­க­ளில் வாழ்­ப­வர்­க­ளும் அங்­கன்­வாடி மையங்­க­ளில் முட்டை வழங்க இருப்­ப­தால் மகிழ்ச்சி அடை­கின்­ற­னர் என்று நிர்­வாரி மாவட்­டத்­தைச் சேர்ந்த மஸ்ட்­ராம் கோஷ் என்­ப­வர் தெரி­வித்­தார். இவர் உண­வுக்­கான உரிமை இயக்­கத்­தைச் சேர்ந்­த­வர்.

ஹைத­ரா­பாத்­தில் உள்ள தேசிய ஊட்­டச்­சத்து நிறு­வ­னத்­தின் (National Institute of Nutrition) முன்­னாள் துணை இயக்­கு­நர் டாக்­டர். வீணா சத்­ருங்னா கூறு­கை­யில், “ஊட்­டச்­சத்து குறை­பாடு உள்ள குழந்­தை­க­ளுக்கு முட்டை வழங்­கு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­வர்­கள், அதி­கா­ரத்­தில் அமர உரி­மை­யில்லை. குழந்­தை­க­ளுக்கு முட்டை சிறந்த உணவு. இது கலாச்­சா­ரப்­படி ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டது. குழந்­தை­கள் விரும்­பு­வார்­கள். எளி­தில் ஜீர­ண­மா­கும். மக்­க­ளில் 85 சத­வி­கி­தம் பேர் முட்­டையை வழக்­க­மாக சாப்­பி­டு­கின்­ற­னர். முட்­டை­யில் அதி­கம் புரோட்­டீன் உள்­ளது. வைட்­ட­மின் சி தவிர மற்ற எல்லா சத்­துக்­க­ளும் உள்­ளன. நாம் முட்டை சாப்­பிட விடா­மல் தடுத்து, நமது குழந்­தை­களை பட்­டினி போடு­கின்­றோம். முட்­டை­யால் எவ்­வித பாதிப்­பும் இல்லை. ஆறு மாதத்­திற்­கும் குறை­வான குழந்­தை­க­ளுக்கு முட்­டையை கொடுக்­கா­தீர்­கள். மற்­ற­வர்­கள் ஏழை­களை பற்றி கவ­லைப்­ப­டு­கின்­றார்­களா? கர்­நா­டகா போன்ற மாநி­லங்­க­ளில் முட்­டையை தீவி­ர­மாக எதிர்ப்­ப­வர்­க­ளி­னால், சில சம­யங்­க­ளில் விஞ்­ஞா­னி­கள் கூட பின்­வாங்க வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கி­றது. குழந்­தை­க­ளுக்கு முட்டை அவ­சி­யம். இதற்கு ஈடாக எந்த காய்­க­றி­யும் இல்லை” என்று தெரி­வித்­தார்.

தேசிய குடும்ப நல கணக்­கெ­டுப்­பின்­படி (National Family Health Survey—NHFS4), மத்­திய பிர­தே­சத்­தில் 42 சத­வி­கித குழந்­தை­கள் சரி­யான வளர்ச்சி இல்­லா­மல் இருக்­கின்­ற­னர். 42.8 சத­வி­கித குழந்­தை­கள் எடை குறை­வாக இருக்­கின்­ற­னர். ஊட்­டச்­சத்து குறை­பாடு பழங்­குடி மக்­கள் மத்­தி­யில் அதி­க­மாக இருக்­கின்­றது. பழங்­கு­டி­யி­னர் குழந்­தை­க­ளில் 48.2 சத­வி­கி­தம் போதிய வளர்ச்­சி­யின்மை, 51.5 சத­வி­கி­தம் எடை குறை­வாக உள்­ளது. தாழ்த்­தப்­பட்ட குழந்­தை­க­ளில் 47.6  சத­வி­கி­தம் போதிய வளர்ச்­சி­யின்மை, 45.9 சத­வி­கி­தம் எடை குறை­வாக உள்­ளது என்று உண­வுக்­கான உரிமை இயக்­கத்­தைச் சேர்ந்த சச்­சின் ஜெயின் தெரி­வித்­தார்.  இவர் செப்­டம்­பர் மாதம் அங்­கன்­வாடி மையங்­க­ளி­லும், மதிய உணவு திட்­டத்­தி­லும் முட்டை சேர்க்க வேண்­டும் என்று முதல்­வர் கமல்­நாத்­திற்கு கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

முதல்­வர் கமல்­நாத்­திற்கு சச்­சின் ஜெயின் எழு­திய கடி­தத்­தில், தேசிய முட்டை ஒருங்­கி­னைப்பு குழு­வின் கருத்­துப்­படி, முட்டை இயற்­கை­யா­கவே கிடைக்­கும் சரி­வி­கித சத்­துக்­கள் உள்ள உணவு. இதில் புரோட்­டீன் சத்து முழு­மை­யாக இருக்­கி­றது. ஏனெ­னில் முட்­டை­யில் ஒன்­பது வித­மான அமினோ அமி­லங்­கள் உள்­ளன. முட்­டைக்கு பதி­லாக பாதாம் பருப்பு வழங்­கு­வ­தால் அதிக செலவு ஆகும். ஒரு முட்­டை­யில் 6 கிராம் புரோட்­டீன் உள்­ளது. இதே சத்து கிடைக்க வேண்­டும் எனில் ஒரு குழந்தை 25 பாதாம் பருப்பை சாப்­பிட வேண்­டும் என்று கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

சிலர் முட்­டைக்கு பதி­லாக பால் வழங்­க­லாம் என்­கின்­ற­னர். பால் வழங்­கு­வது என்­பது சிர­ம­மா­னது. பால் பாது­காப்­பாக வைப்­ப­தற்கு பிரிட்ஜ் வேண்­டும். பாலை காய்ச்சி குழந்­தை­க­ளுக்கு கொடுக்க வேண்­டும். முட்­டைக்கு இவ்­வித பிரச்­னை­கள் இல்லை. பாலு­டன் ஒப்­பி­டு­கை­யில் முட்டை கெட்­டுப்­போக வாய்ப்பு குறைவு.

அங்­கன்­வா­டி­க­ளி­லும், சத்­து­ணவு கூடங்­க­ளி­லும் குழந்­தை­க­ளுக்கு முட்டை வழங்­கு­வதை கண்­கா­ணிப்­பது எளிது. முட்டை கொடுக்­க­வில்லை எனில் குழந்­தை­களே புகார் தெரி­வித்து விடு­வார்­கள். ஆனால் பால் 150 மில்லி லிட்­டர் கொடுக்­கின்­ற­னரா? 20 கிராம் பாதாம் வருப்பு கொடுக்­கின்­ற­னரா என்­பதை கண்­கா­ணிப்­பது சிர­மம்.

(சமீ­பத்­தில் பார­திய ஜன­தா­வைச் சேர்ந்த ஆதித்­ய­நாத் முத­ல­மைச்­ச­ராக உள்ள உத்­த­ர­பி­ர­தேச மாநி­லத்­தில் சொன்­பத்ரா மாவட்­டத்­தில் செயல்­ப­டும் அர­சுப் பள்­ளி­யான ‘சலாய் பன்வா  தொடக்­கப்­பள்­ளி’­யில் மதிய உண­வுத் திட்­டத்­தில் குழந்­தை­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் பாலில், “ஒரு வாளி தண்­ணீ­ரில் 1 லிட்­டர் பால்” ஊற்றி கலந்து, 81 குழந்­தை­க­ளுக்கு ‘பால் தண்­ணீர்’  கொடுக்­கப்­பட்ட சாதனை  வீடியோ சமூக வலைத்­த­ளங்­க­ளில் வெளி­யாகி பர­லது கவ­னத்தை ஈர்த்­தது.)

முட்­டை­யின் சிறப்பு பற்றி சச்­சின் ஜெயின் கூறு­கை­யில், “. அதிக புர­தச்­சத்து உள்ள சோயா, நிலக்­க­டலை போல் அல்­லா­மல், முட்டை எளி­தில் ஜீர­ண­மாக கூடி­யது. 100 சத­வி­கித சத்­துக்­களை உடல் கிர­கித்­துக் கொள்­ளும். முட்டை சாப்­பி­டும் குழந்­தை­க­ளுக்கு முட்டை வழங்­கு­வ­தில் எவ்­வித ஊச­லாட்­ட­மும் இருக்க கூடாது. குறிப்­பாக ஊட்­ட­சத்து குறை­பாடு உள்ள மத்­திய பிர­தே­ஷம் போன்ற மாநி­லங்­க­ளில் ஊச­லாட்­டம் இருக்­கவே கூடாது” என்று தெரி­வித்­தார்.  

வெங்­கா­யம் சாப்­பி­டா­த­வர்­க­ளுக்கு எப்­படி வெங்­காய விலை பற்றி கவ­லை­யில்­லையோ, அதே போல் முட்டை சாப்­பி­டா­த­வர்­கள், முட்­டையை பற்றி கவ­லைப்­ப­டா­மல் இருப்­பதே சாலச் சிறந்­தது.

நன்றி. தி வீக் ஹெல்த் இத­ழில் சிரா­வானி சங்­கர்.