சுக்பால் சிங் பணக்காரர் அல்ல. ஆனால் அவர் மனது தாராளமானது. இவர் உத்தரபிரதேசம் முஜாபர்நகர் மாவட்டத்தில் உள்ள புர்குயாஜி என்ற நகரைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி.
இந்த நகரின் மக்கள் தொகை 30 ஆயிரம். இதில் மூன்றில் இரண்டு பங்கு பேர் முஸ்லீம்கள். சீக்கியர்கள் 200 பேருக்கும் குறைவாகவே வாழ்கின்றனர். இந்த ஊரில் முஸ்லீம்கள் மசூதி கட்டுவதற்காக 900 சதுரஅடி நிலத்தை நன்கொடையாக சுக்பால் சிங் வழங்கியுள்ளார்.
உத்தரபிரதேசத்திற்கும், உத்தரகாண்ட் மாநில எல்லைப் பகுதியில் உள்ள புர்குயாஜி நகரில், 1857ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் அடிமைத்தனத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்த 500 சுதந்திர போராட்ட வீரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு இந்த சுதந்திர போராட்ட வீரர்களை தூக்கிலிட்ட இடம் சுலிவாலா பக் (சதுக்கம்) என்று அழைக்கப்படுகிறது. இன்றளவும் மக்கள் அந்த சுதந்திர தியாகிகளை ஒவ்வொரு வருடமும் நினைவு கூறி அஞ்சலி செலுத்துகின்றனர்.
புர்குயாஜி நகர பஞ்சாயத்து சேர்மன் ஜாகிர் பருக்கீ கூறுகையில், “இந்த வருடம் சீக்கிய மதகுரு குருநானக்கின் 550வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் குருநானக்கின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று சுக்பால் சிங் விரும்பினார். அவர் குருநானக்கின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மசூதி கட்ட நிலம் வழங்கியுள்ளார்.
எங்கள் ஊரில் பல மசூதிகள் உள்ளன. இப்போது கட்டப்போகும் மசூதி சிறப்புடையது. ஏனெனில் ஒரு சீக்கியர் அவரது மதத்தை கொண்டாடும் வகையில், நிலத்தை மசூதி கட்ட வழங்கியுள்ளார். இந்த ஊரில் மதநல்லிணக்கம் சிறப்பாக உள்ளது. நாங்கள் எல்லா மத விழாக்களையும் கொண்டாடுகின்றோம். சுக்பால் சிங் பெரிய பணக்காரர் அல்ல. அவரது மனது பெரியது. அவர் சாதாரண ஜவுளி வியாபாரிதான்”என்று தெரிவித்தார். “எங்கள் குரு எல்லா மனிதர்களும் சமமானவர்கள். நாம் எல்லா மதங்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதனால்தான் மசூதி கட்டநிலத்தை வழங்கியுள்ளேன். உலகம் முழுவதும் சீக்கியர்கள் குருநானக்கின் 550 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். நான் செய்தது எனது குருவுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் என்று நம்புகின்றேன்” என்று சுக்பால் சிங் தெரிவித்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து மூன்று வருடங்களுக்கு பிறகு டில்லியில் பிறந்தவர் சுக்பால் சிங். அவருக்கு மூன்று வயது இருக்கும் போது, அவரது குடும்பம் புர்குயாஜிக்கு இடம் பெயர்ந்தது.
சிறு வயதில் இருந்தே, இந்த நகரத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் 1967ல் ஜவுளி கடையை தொடங்கினார். இந்த கடையை ஐம்பது வருடங்களாக நடத்தி வருகிறார். முஜாபர்நகரில் மொத்த வியாபாரிகளிடம் இருந்து துணிகளை வாங்கி விற்பனை செய்கிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
“நான் மசூதி கட்ட நிலத்தை வழங்க
எண்ணிய போது, இது பற்றி குடும்பத்தாருடன் ஆலோசனை நடத்தினேன். இது நல்ல காரியம் என்று அனைவரும் சம்மதித்தனர்” என்று சுக்பால் சிங் தெரிவித்தார். சென்ற முதல் தேதி பஞ்சாயத்து நடத்திய எளிய நிகழ்ச்சியில், சுக்பால் சிங் மசூதி கட்டுவதற்கான நிலத்தின் ஆவணங்களை பஞ்சாயத்திடம் ஒப்படைத்தார்.
“எங்களுக்கு கடவுள் தேவையான அனைத்தையும் கொடுத்துள்ளார். இதை அதிகபட்ச மக்களுக்கு பலனிக்கும் வித்த்தில் பயன்படுத்த வேண்டும். நம்மிடம் இருப்பதை எல்லோரிடத்திலும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இவை அனைத்தையும் கொடுத்தது கடவுளே. நமக்கு எதுவும் சொந்தமில்லை” என்று சுக்பால் சிங் தெரிவித்தார்.
இருபது வருடங்களுக்கு முன், சாலை அமைக்க நிலம் தேவைப்பட்ட போது, சுக்பால் சிங் மகிழ்ச்சியுடன் சாலை அமைக்க நிலத்தை வழங்கினார். அவர் எதை நம்புகின்றாரோ அதன்படியே செயல்படுகின்றார்.
நன்றி: ரீ டிப் இணையதளத்தில்
கணேஷ் நடார்.