ஒடிசா மாநிலத்தில் மயூர் பஞ்ச் பகுதியில் வசிப்பவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி பெஹ்ரா (72). இவரது கணவர் இறந்து விட்டார். மகள், பேரனுடன் திரவுபதி வசித்து வருகிறார். வறுமையில் வாடும் இவர் வசிப்பதற்கு வீடு இல்லாமல் கடந்த மூன்று வருடமாக கழிப்பறையில் வசித்து வருகிறார். சமையல் செய்வது, தூங்குவது என எல்லாவற்றையும் கழிப்பறையிலேயே செய்கின்றார். இரவு திரவுபதி கழிப்பறையில் படுத்து தூங்குகின்றார். மகளும், பேரனும் வெளியில் படுக்கின்றனர். தனது அவல நிலையை மாநில அரசு கண்டும் காணாமல் உள்ளது. விரைவில் தனக்கு குடியிருக்கு வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திரவுபதி உள்ளார். இது பற்றி பஞ்சாயத்து தலைவர் கூறுகையில், வீடு கட்டிக் கொடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. அரசு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டால், மூதாட்டிக்கு வீடு ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். கனிம வளம் நிறைந்த ஒடிசா மாநில முதல்வராக பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த நவீன் பட்நாயக் கடந்த 2000ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக தற்போது வரை ஐந்தாவது தடவையாக முதல்வராக உள்ளார்.