இந்தோனிஷியாவின் மேற்கு பப்புவாவில் பலீம் பள்ளத்தாக்கில் வசிக்கும் டானி பழங்குடியின மக்கள், தங்கள் மூதாதையரின் உடலை பாதுகாத்து வருகின்றனர். தாங்கள் நேசித்தவர் இறந்து விட்டால், ஒரு பெண் விரலை வெட்டி காணிக்கை செலுத்தும் பழக்கமும் இருந்துள்ளது.
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்புதான் டானி பழங்குடியின மக்கள் வாழ்வதை மேற்கத்திய ஆய்வாளர்கள் வெளியுலகிற்கு தெரியப்படுத்தினர். இவர்கள் தங்கள் மூதாதையர்களின் சடலங்களுக்கு சடங்கு செய்வது தங்களுக்கு மகிழ்ச்சியாகவும், துக்கங்களில் இருந்து விடுதலை பெற உதவுவதாகவும் கூறுகின்றனர். இவர்கள் மொத்தம் 7 பதப்படுத்தப்பட்ட உடல்களை பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இரண்டு உடல்களை மட்டுமே மற்றவர்கள் பார்க்க அனுமதிக்கின்றனர்.
இறந்த உடல்களை பதப்படுத்தும் சடங்கு 250 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும், 250 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒரு வீரரின் சடலத்தை இன்றளவும் பதப்படுத்தி பாதுகாத்து வருவதாகவும் கூறுகின்றனர். அந்த வீரருக்கு 25 மனைவிகள் இருந்தார்களாம். இந்த டானி இன மக்கள் கடந்த காலங்களில் நரபலி கொடுத்துள்ளனர். தற்போது அதற்கு பதிலாக பன்றிகளை பலியிடுகின்றனர். குடும்பத்தில் ஒருவர் மரணமடைந்தால், அவருக்கு நெருக்கமான ஒரு பெண் விரலை வெட்டி வீசும் சடங்களையும் செய்து வந்துள்ளனர். தற்போது இந்த வழக்கத்தை மாற்றியுள்ளனர். விரல் துண்டிக்கப்பட்ட பல பெண்கள் தற்போதும் உள்ளனர்.