செக் குடியரசு மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: 6 போ் பலி

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 20:47

பிராக்,

ஐரோப்பிய நாடான செக் குடியரசின் ஆஸ்ட்ரவா நகரில் உள்ள மருத்துவமனையில் இன்று மா்ம நபா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 போ் கொல்லப்பட்டனர். 2 போ் காயமடைந்தனா். இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்

ஆஸ்ட்ராவா நகரில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் காத்திருப்பு அறையில் இருந்தவர்கள் மீது செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மா்ம நபா் துப்பாக்கி சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த 4 பேரில், 2 போ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார். சிசிடிவி கேமரா மூலம் அவரை அடையாளம் கண்ட போலீசார் கார்களிலும் இரண்டு ஹெலிகாப்டரிலும் அவரை விரட்டி சென்றனர்.

ஒருகட்டத்தில் தாக்குதல் நடத்திய நபர் சென்ற காரை ஹெலிகாப்டர்கள் வழிமறித்தன. தான் பிடிப்பட்டுவிட்டோம் என்பதை அறிந்த அந்த நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த நபர் இந்த துப்பாக்கி சூட்டை ஏன் நடத்தினார் என்பது இதுவரை தெரியவில்லை. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஐரோப்பிய நாடான செக் குடியரசில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மிகவும் அரிதாகவே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பிரதமர், அதிபர் இரங்கல்

உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரெஜ் பாபிஸ் மற்றும் அதிபர் மிலோஸ் ஜெமான் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எஸ்டோனியாவுக்கு பிரதமர் ஆண்ட்ரெஜ் மேற்கொள்ளவிருந்த இரண்டு நாள் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நான் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளேன். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசு தரப்பில் வழங்கப்படும் என்று பிரதமர் ஆண்ட்ரெஜ் பாபிஸ் தெரிவித்துள்ளார்.