பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள எம்.பிக்கள்: பாஜக முதலிடம், காங்கிரஸ் இரண்டாமிடம்

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 20:25

புதுடில்லி,

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களை கொண்ட கட்சிகளின் பட்டியலில் பாஜக முதலிடத்திலும், காங்கிரஸ் கட்சி 2-வது இடத்திலும் உள்ளதாக ஏடிஆர் (ADR) என்றழைக்கப்படும் ஜனநாயக சீர்திருத்திற்கான சங்கம் (Association for Democratic Reforms) தெரிவித்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்திற்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இரண்டும் தற்போது பதவியில் உள்ள 759 எம்.பிக்கள் மற்றும் 4,063 எம்.எல்.ஏக்களின் தேர்தல் பிரமாண பத்திரங்களை பரிசீலித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை சந்தித்து வரும் மக்களவை எம்.பிக்களின் எண்ணிக்கை கடந்த 2009ம் ஆண்டு 2 ஆக இருந்த நிலையில் 2019ல் அது 19 ஆக உயர்ந்துள்ளது.

3 எம்.பிக்கள் மற்றும் 6 எம்.எல்.ஏக்கள் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் கற்பழிப்பு தொடர்பான வழக்குகளை சந்தித்து வரும் 41 பேரை அங்கீகாரம் பெற்ற கட்சிகள் வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை சந்தித்து வரும் 66 பேருக்கு மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் 46 பேருக்கும் பகுஜன் சமாஜன் கட்சி 40 பேருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் சிக்கிய மக்களவை தேர்தல் வேட்பாளர்களின் எண்ணிக்கை 38ல் இருந்து 126 ஆக உயர்ந்துள்ளது. இது 231 சதவீதம் அதிகம்.

மாநிலங்கள் வாரியாக பெண்களுக்கு எதிரான கிரிமினல் குற்ற வழக்கை சந்தித்து வரும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் பட்டியலில் 16 பேருடன் மேற்குவங்கம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக 12 பேருடன் ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிக்கிய 572 பேர், மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர். ஆனால் இவர்களில் ஒருவர் கூட இதுவரை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதில்லை.

அங்கீகாரம் பெற்ற கட்சிகள் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் சிக்கிய 410 பேருக்கு சீட்டு வழங்கியுள்ளன. அவர்களில் 89 பேர் மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் சிக்கியவர்கள் என தெரிந்திருந்தும் அரசியல் கட்சிகளால் சீட்டு வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா 84 பேருடன் முதல் இடத்தில் உள்ளது. அடுத்தப்படியாக 75 பேருடன் பீகார் இரண்டாம் இடைத்தில் உள்ளது என ஜனநாயக சீர்திருத்திற்கான சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஆர் அறிக்கையின் முழு விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்

https://adrindia.org/content/analysis-mpsmlas-declared-cases-related-crimes-against-women-4