நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றாவாளிகளில் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 19:28

புதுடில்லி,

நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை பெற்ற 4 பேரில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இரவு டில்லியில் நிர்பயா (ஜோதி சிங்) என்ற பெண் ஓடும் பஸ்சில் 6 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு சாலையில் தூக்கி எறியப்பட்டார்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பத்து நாட்களுக்கு மேல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த பெண் டிசம்பர் 29ம் தேதி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு 16 வயது என்பதால் சிறார் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். மூன்று ஆண்டுகள் சிறைதண்டனைக்கு பின் அவர் விடுவிக்கப்பட்டார்.

மற்ற 5 குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங் கடந்த 2013ம் ஆண்டு திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

மீதி 4 பேருக்கும் வழக்கு விசாரணை முடிவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை டில்லி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன.

மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பின்பும் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. திகார் சிறையில் தூக்கிலிடும் பணிக்கு ஆள் இல்லாததால் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங் தன் மரண தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அக்‌ஷய் குமார் சிங் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி நிர்பயா வழக்கின் மற்ற மூன்று குற்றவாளிகளின் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.