உன்னாவ் பாலியல் வழக்கில் டிசம்பர் 16ம் தேதி தீர்ப்பு: டில்லி நீதிமன்றம் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 18:52

புதுடில்லி,

உன்னாவை சேர்ந்த இளம் பெண் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வரும் டிசம்பர் 16ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டில்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

கார் விபத்து

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் சென்ற கார் ரேபரேலியில் கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கியது. இதில் உன்னாவ் பெண் படுகாயமடைந்தார். அவருடன் காரில் சென்ற 2 உறவினர்கள் உயிரிழந்தனர். அவருடைய வழக்கறிஞரும் படுகாயமடைந்தார்.

இந்த விபத்து உண்மையில் ஒரு கொலை முயற்சியா என்ற சந்தேகம் எழுந்தது. 

அதை தொடர்ந்து இந்த வழக்கு உட்பட உன்னாவ் பெண் தொடர்பான 5 வழக்குகளை உச்சநீதிமன்றம் சிபிஐயிடம் ஒப்படைத்தது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உன்னாவ் பெண்ணிடம் சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்.

இந்நிலையில் டில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் டிசம்பர் 16ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா இன்று அறிவித்தார்.