குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம்

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 18:20

இஸ்லாமாபாத்,

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளின் விவகாரத்தில் தலையிடும் நோக்கத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின்படி பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் அகதிகளாக குடியேறிய முஸ்லிம் அல்லாத பிற மதத்தினருக்கு 6 ஆண்டுகளுக்கு பின் இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் :

பிற்போக்குத்தனமான பாராப்பட்சமான இந்த மசோதா சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது. அண்டை நாடுகளின் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற தீய நோக்கத்தை நிறைவேற்றி கொள்ள இந்தியா மேற்கொள்ளும் முயற்சிதான் இந்த மசோதா.

பொய்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மசோதா சர்வதேச மனித உரிமைகளுக்கும் மதம் மற்றும் நம்பிக்கைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் எதிரானது.

சிறுபான்மையினர் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையே போடப்பட்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு முற்றிலும் எதிராக இந்த மசோதா அமைந்துள்ளது.

இந்திய அரசின் இந்து ராஷ்டிரம் மற்றும் இந்துத்துவா கொள்கையின் அடிப்படையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் தொடர்பாக வெற்று பேச்சுக்களை பேசி வந்தது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் மனநிலையையும், முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களின் விரோதத்தின் உண்மையான தன்மையையும் இந்த மசோதா உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது என பாகிஸ்தான் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.