38 பேருடன் சென்ற சிலி ராணுவ விமானம் மாயம்

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 17:29

சாண்டிகோ,

17 பணியாளர்கள், 21 பயணிகள் என மொத்தம் 38 பேருடன் சென்ற சிலி ராணுவ விமானம் மாயமானது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு சென்ற ராணுவ விமானம் மாயமானதாக அந்நாட்டு விமானப் படை தெரிவித்துள்ளது.

C-130 ஹெர்குலஸ் வகையைச்சேர்ந்த விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை  4.55 மணியளவில் புறப்பட்டுச்சென்றதாகவும்,  3000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்ததும் தலைநகர் சாண்டியகோவில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை 6:13 மணிக்கு இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் 38 பேர் பயணித்துள்ளனர். மாயமான விமானத்தை தேடும் பணியில் சிலி மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விமானம் மாயமானது குறித்த தகவல் அறிந்ததும், அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ள சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா, நிலமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கப்பல் மூலம் தேடுதல் பணி நடைபெறுவதாக விமானப் படையின் நான்காவது ஜெனரல் எட்வர்டோ மொஸ்குவேரா தெரிவித்துள்ளார்.