உள்ளாட்சித் தேர்தலை தடுக்க திமுக சதித் திட்டம்: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 17:04

சென்னை,

உள்ளாட்சித்  தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் தோற்று விடுவோம் என்ற பயத்தால் திமுக தேர்தலை தடுக்க பல கோணங்களில் சதித்திட்டம் தீட்டி வருகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டினார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த தமாகா நிர்வாகி வீட்டில் இன்று  நடைபெற்ற படத்திறப்பு விழாவில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்தால் கிராமங்கள் பயன்பெறும். அதன் அடிப்படையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. ஆனால், உள்ளாட்சித்  தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் தோற்று விடுவோம் என தெரிந்துக்கொண்ட திமுக உள்ளாட்சி தேர்தலை தடுக்க பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி வருகிறது.

கிராம மக்களுக்கு கிடைக்கக்கூடிய திட்டங்களை திமுக திட்டம் போட்டு தடுக்க நினைக்கிறது. திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளும் உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலை விரும்பவில்லை என தெரிகிறது.

இதனால், தான் உச்ச நீதிமன்றத்தில் தேர்தலை முறியடிக்க அடுத்தடுத்து வழக்குகளை தொடர்ந்து வருகின்றனர்.

எது நடந்தாலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தமாகா தேர்தலை சந்திக்கும். அதற்கான பேச்சு வார்த்தை அதிமுக தலைமையுடன் நடைபெற்று வருகிறது.

டிசம்பர் 21-ம் தேதியிலிருந்து 27-ம் தேதி வரை தமிழ் ஆட்சி மொழி வாரம் கொண்டாட இருப்பதால் தமிழில் பெயர் பலகைகள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை மசோதா நாட்டின் ஒட்டு மொத்த நலன் காக்கும் மசோதாவாக இருக்கிறது.

சட்ட விரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என குறிப்பிடுவோர்களுக்கு இந்த மசோதா மூலம் நாட்டின் குடிமகனாக இருக்க வழிவகை செய்யும். இதன் மூலம் சாதி, மதம்,மொழி, இனம் எனக்கூறி அரசியல் செய்ய நினைத்தால் அது மக்களிடம் எடுபடாது  என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.