திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழா

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 16:43

திருவண்ணாமலை,

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றது, உண்ணாமலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில்  மகாதீபத் திருவிழா நடைபெறுகிறது.

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பரணி தீபம்

விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பின் அதிகாலை 4 மணி அளவில் கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும் ஏற்றப்பட்டது.

பின் கோயில் சிவாச்சாரியார்கள் கைகளில் பரணி தீபத்தை ஏந்தியபடி இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்கள், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளை வலம் வந்தது பக்தா்கள் வணங்கிய பிறகு, பரணி தீபம் மீண்டும் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

மலை மீது மகா தீபம்

திருவண்ணாலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. 

மலை மீது மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், தீபத் திரியாக பயன்படுத்தப்படும் 11,000 மீட்டா் காடா துணி மற்றும் 5 அடி உயரமும், 200 கிலோ எடையும் கொண்ட மகா தீப கொப்பரைக்கு கோபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மகாதீப விழாவை தரிசிக்க கோயிலுக்குள் பக்தர்கள் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 3.30 மணி வரை அனுமதிக்கப்பட உள்ளனர். 

மகா தீபத்தை தரிசனம் செய்வதற்காக வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

திருவண்ணாலை மகா தீபத் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தா்கள் வருவார்கள் என்பதால் பக்தா்களின் வசதிக்காக 2,600 சிறப்பு பேருந்துகளும், 22 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. 

 பாதுகாப்புப் பணிக்காக சுமார் 13,000 போலீஸார் திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்கள் அண்ணாமலையா, அருணாச்சலா என இறைவன் புகழைப்பாடி கிரிவலம் வருகின்றனர்.