குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம்

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 16:22

கவுஹாத்தி,

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து  இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு குடியுரிமை அளிக்கும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் நேற்று நள்ளிரவு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த மசோதாவில் அண்டை நாட்டை சேர்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலே அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி 11 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தால் தான் இந்திய குடியுரிமை கிடைக்கும்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா சட்டமானால் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த பிராந்திய மக்கள் மற்றும் பழங்குடியினர் தங்கள் உரிமைகளை இழப்பார்கள் என வடகிழக்கு மாநில மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

அதன் காரணமாக குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநில மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாணவர் சங்கங்கள் இன்று 11 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி வடகிழக்கு மாநிலங்களில் இன்று காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. நாகாலாந்து மாநிலத்தில் ஹார்ன்பில் திருவிழா நடைபெற்று வருவதால் அங்கு மட்டும் போராட்டம் நடக்கவில்லை.

முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தால் வடகிழக்கு மாநிலங்களில் இன்று இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன. பல இடங்களில் பேரணி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது முழு அடைப்பு போராட்டம் இதுவாகும், இதற்கு முன் ஜனவரி 8ம் தேதி வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அசாம்

அசாமில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அதேசமயம் பெங்காலி மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பாரக் சமவெளியில் மட்டும் இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை.

கடைகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. குவாஹாத்தியில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பேரணி நடத்தினர். தலைமை செயலகம் அருகே போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது.

சில இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை போக்குவரத்து முழுமையாக முடங்கியது.

பல இடங்களில் சாலைகளில் டயர்கள் எரிக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாலிகான் பகுதியில் அரசு பேருந்து மீது கல்வீசப்பட்டது. ஸ்கூட்டர் ஒன்று தீவைத்து கொளுத்தப்பட்டது. திப்ருகார்ஹ் மாவட்டத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவன ஊழியர்களை வேலைக்கு செல்லவிடாமல் தடுத்தவர்கள் மீது துணை ராணுவ படையினர் தடியடி நடத்தினர்.இதில் 3 பேர் காயமடைந்தனர்.

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேச மாணவர்கள் சங்கம் அழைப்பின் பேரில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தால் அருணாச்சல பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்கள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள் மூடப்பட்டன.

ஆங்காங்கே சில கல்வீச்சு சம்பவங்களை தவிர்த்து அருணாச்சல பிரதேசத்தில் போராட்டம் அமைதியாக நடைபெற்றதாக காவல்துறை கண்காணிப்பாளர் தும்மே அமோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மணிப்பூர்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் பல இடங்களில் பேரணி நடத்தினர். மசோதா திரும்ப பெறப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

அதேசமயம் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல அனுமதி சீட்டு வழங்கும் இன்னர் லைன் பெர்மிட் (Inner line Permit system) என்ற நடைமுறை மணிப்பூர் மாநிலத்தில் அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுவரை இந்த அனுமதி சீட்டு வழங்கும் நடைமுறை அருணாச்சல பிரதேசம், மிசோரம் மற்றும் நாகாலாந்தில் மட்டும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஆனால் எந்த வன்முறை சம்பவங்களும் நடக்கவில்லை.

மேகாலயா

மேகாலயாவில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு கடைகள், நிதி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்கள் செயல்பட்டாலும் 10 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களே பணிக்கு வந்திருந்தனர்.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திரிபுரா

திரிபுராவில் முழு அடைப்பு போராட்டத்தின் போது சில வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள மனுகாத் சந்தையில் பழங்குடியினர் அல்லாதவர்களின் கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதில் யாரும் காயமடையவில்லை.

இந்த சம்பவம் பழங்குடியினர் அல்லாதவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முழு அடைப்பு போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பான அச்சம் காரணமாக சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

அகார்தலாவில் காலை 9.30 மணியளவில் போராட்டக்காரர்கள் முக்கிய சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். 45 மணிநேரம் நடைபெற்ற போராட்டத்திற்கு பின் சுமார் 300 பேர் அமைதியான முறையில் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர் என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களை தவிர தலைநகர் டில்லியிலும் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தினர்.