புதிய தொழில் துவங்க 8000 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் தயார் – துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல்

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 15:50

சென்னை,

தமிழ்நாட்டில் புதிய தொழில் துவங்குவதற்கு 8000 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் தயார் நிலையில் இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன், அமெரிக்க - இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆகியோருடன் "தமிழகத்தில் புதிதாக தொழில் முதலீடுகள் மேற்கொள்வது" குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

அவர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ்,

தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா, மற்றும் மருத்துவ பூங்காக்களில் ஏறக்குறைய எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் இருப்பதாகவும், இதன் மூலம் புதிய தொழில்களை துவங்கலாம் என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் முதலீட்டாளருக்கு ஏற்ற சூழலை மேம்படுத்தவும் தொழில் வளர்ச்சி பெருகவும் துறை ரீதியாக கொள்கை முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.