குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் மாநிலங்களவையில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே நிபந்தனை

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 14:42

மும்பை,

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து சிவசேனா எழுப்பியுள்ள சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு உரிய திருத்தங்கள் செய்யப்பட்டால் தான் மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவு அளிப்போம் என சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே இன்று மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியா்கள், பவுத்தா்கள், சமணர்கள், பார்சி இனத்தவா், கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நேற்று நள்ளிரவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இந்த மசோதா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மகாராஷ்டிர முதலமைச்சரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீது குடிமகன் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதைத் தீர்க்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.

அதை விட்டுவிட்டு மசோதாவை எதிர்த்தால் அவர்களை தேசத்துரோகிகள்' என்று கூறுவதா?

மசோதா தொடர்பான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பின்பு தான் மாநிலங்களவையில் மசோதாவுக்கு சிவசேனா ஆதரவளிக்கும்.

நாட்டை தாங்கள் மட்டுமே காப்பாற்றுவதாக பாஜக நினைத்துக் கொண்டிருப்பது வெறும் மாயை.

சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு உரிய திருத்தங்கள் செய்யப்படாத வரை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு சிவசேனாவின் 17 எம்.பிக்களும் ஆதரவளித்த நிலையில்,

மாநிலங்களவையில் 3 உறுப்பினர்கள் மட்டும் இருக்கும் நிலையில் உத்தவ் தாக்கரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.