குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது : எதிர்க்கட்சிகள் கண்டனம்

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019 12:53

புதுடில்லி,

அண்டை நாடுகளை சேர்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி பல மணி நேர விவாதத்திற்கு பின் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) நள்ளிரவு மக்களவையில் நிறைவேறியது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து  இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு குடியுரிமை அளிக்கும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த மசோதாவை, இரு அவைகளிலும் நிறைவேற்றி, சட்டமாக அமல்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.

மசோதா மீதான விவாதத்தின் போது, குடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என அமித் ஷா விளக்கமளித்தார்.

ஆனால் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி, மசோதாவின் நகலை கிழித்து எறிந்து அவையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த மசோதாவில் இலங்கை தமிழர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திமுக உள்ளிட்ட சில கட்சிகள் முன்வைத்தன.

அதேசமயம் இந்த மசோதாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள்,  அதிமுக, சிவசேனா, ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்தன.

மசோதாமீது விவாதம்

மசோதா மீது 7 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பின், மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் பதிவாகின. அதைத் தொடர்ந்து மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் நிறைவேறியதை தொடர்ந்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதா டிசம்பர் 11ம் தேதி (புதன்கிழமை) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் உள்ளது. ஆனால் அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவளித்தால் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற வாய்ப்புள்ளது.

மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறும் என பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி நன்றி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.பிக்களுக்கு டுவிட்டரில் நன்றி கூறியுள்ளார்.

நீண்ட, விரிவான விவாதத்துக்குப்பின், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்த அனைத்து எம்.பி.,க்களுக்கும் நன்றி. மசோதாவின் அனைத்து அம்சங்களையும் தெளிவாக விளக்கிய, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு என் பாராட்டுக்கள். விவாதத்தின்போது எம்.பி.,க்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அவர் சிறப்பாக பதிலளித்தார் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகளின் விவரம் பின்வருமாறு :

ராகுல் காந்தி 

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என ராகுல் காந்தி டுவிட்டரில் சாடியுள்ளார்.

இந்த மசோதாவுக்கு ஆதவளிப்பது  நம் தேசத்தின் அஸ்திவாரத்தை நாசம் செய்ய முயற்சிப்பதற்கு சமம் என டுவிட்டரில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளதன் விவரம் :

நேற்று நள்ளிரவு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் மதவெறி மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுடன் இந்தியா போராடி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நம் அரசியலமைப்பு, குடியுரிமை, ஒருங்கிணைந்த வலிமையான இந்தியாவுக்கான நம் கனவுகள் அனைவருக்கும் உரியது. ஆனால் நம் நாட்டின் அஸ்திவாரமாக இருக்கும் அரசியலமைப்பை அழிக்கும் நோக்கத்துடன் இந்த அரசு செயல்படுகிறது. அதற்கு எதிராக நாம் போராடுவோம்.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரையை பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். நம் முன்னோர்கள் சுதந்திரத்துக்காக தங்கள் ரத்தத்தை சிந்தினர். கடுமையாக போராடி பெற்ற இந்த சுதந்திரம் சமத்துவத்திற்கான உரிமையையும் மத சுதந்திரத்திற்கான உரிமையையும் உள்ளடக்கியது என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

ப. சிதம்பரம் சாடல்

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அரசியலமைப்புக்கு எதிரானது என சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்  வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு ஆதரவாக தங்கள்  பொறுப்புகளை கைவிடுகிறார்கள் என ப.சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.