விடுதி கட்டண உயர்வை எதிர்த்து குடியரசு தலைவர் மாளிகை நோக்கி ஜே.என்.யூ மாணவர்கள் பேரணி : போலீசார் தடியடி

பதிவு செய்த நாள் : 09 டிசம்பர் 2019 21:14

புதுடில்லி,

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக (ஜே.என்.யூ) மாணவர்கள் விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து இன்று குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் போராட்டத்தை கலைக்க மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.

விடுதி கட்டண உயர்வு மற்றும் தேர்வுக் கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பல வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் கட்டண உயர்வை கண்டித்து குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நேரில் வழங்கும் நோக்கத்துடன் மாணவர்கள் இன்று பேரணியை நடத்தினர்.

மாணவர்கள் போராட்டத்தை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாணவர்கள் அமைதியாக போராட்டம் நடத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் பேரணியாக வந்த மாணவர்கள் பிகாஜி காமா என்ற இடத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்த இடத்தை தாண்டி செல்ல மாணவர்களுக்கு அனுமதி இல்லை. எனவே திரும்பி செல்லும்படி போலீசார் அறிவித்தனர். அதை மாணவர்கள் ஏற்கவில்லை. இதனால் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மாணவர்கள் செல்ல முயன்றனர். அதைத் தொடர்ந்து போலீசார் மற்றும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்களை அங்கிருந்து கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர்கள் இன்று நடத்திய பேரணியாலும் போலீசாரின் தடியடி சம்பவத்தாலும் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.