வெங்காய விலை உயர்வு : மத்திய பாஜக அரசு தூங்குவதாக பிரியங்கா காந்தி விமர்சனம்

பதிவு செய்த நாள் : 09 டிசம்பர் 2019 19:26

புதுடில்லி

வெங்காயம், பெட்ரோல் விலைகள் உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் மத்திய பாஜக அரசு தூங்கிக்கொண்டிருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த நவம்பர் முதல் வாரம் முதல் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. முதல் வாரம், ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையானது. படிப்படியாக உயர்ந்து, ஒரு கிலோ வெங்காயத்தின் விலை தற்போது ரூ. 200 ஆக உள்ளது. இதேபோல், பெட்ரோல் விலை இன்று 75 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வெங்காயம், பெட்ரோல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த விலை உயர்வை வைத்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

பிரியங்கா காந்தி டுவிட்டரில்,”விலை உயர்வு மக்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. பல இடங்களில், வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 200 ரூபாயை தாண்டிவிட்டது. பெட்ரோல் விலை ரூ. 75 ஐ தாண்டிவிட்டது’’

‘‘இப்படி மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், பாஜக அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது” என்று பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.