டில்லியில் கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் : உச்சநீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் : 09 டிசம்பர் 2019 19:13

புதுடில்லி,

டில்லியில் காற்று மாசு அதிகரித்ததை தொடர்ந்து அங்கு கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் இன்று நீக்கியது. அதேசமயம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கட்டுமான பணிகள் நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தலைநகர் டில்லியில் காற்று மாசு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

அதன்படி டில்லியில் கட்டுமான பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. மேலும் காற்று மாசை கட்டுப்படுத்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து பரிந்துரைக்க உயர்மட்ட கமிட்டி உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஆணையிட்டது.

இந்நிலையில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன்னிலையில் காற்று மாசு தொடர்பாக விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணையின் போது ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ். நாத்கரனி உச்சநீதிமன்ற ஆணைப்படி மத்திய அரசு உயர்மட்ட கமிட்டியை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் உச்சநீதிமன்ற ஆணைப்படி டில்லி காற்று மாசு தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையை நீதிபதிகள் பரிசீலித்தனர்.

அதில் டில்லியில் கட்டுமான பணிகள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெற அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து டில்லியில் கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கட்டுமான பணிகள் நடைபெற அனுமதிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகள் டிசம்பர் 11ம் தேதி வரை தாளடி வைக்கோல் எரிக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை சமர்பிக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.

இறுதியில் இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.