நற்செயலில் ஈடுபடு!

பதிவு செய்த நாள் : 10 டிசம்பர் 2019

* எதையும் அலட்சிய எண்ணத்துடன் அணுகாதே. சிறிய விஷயமாக இருந்தாலும் அதில் அக்கறையுடன் ஈடுபடு.

* அறிவு, அழகு, பணம் இவற்றால் மனிதன் ஆணவம் கொள்ளக்கூடாது. எல்லாம் கடவுளின் கருணை அன்றி வேறில்லை.

* உழைக்க இரு கைகள், சிந்தித்து வாழ நல்ல புத்தியை கடவுள் அளித்திருக்கிறார். அதன் மூலம் நற்செயலில் ஈடுபடு.

* எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் மனம் துாய்மையுடன் இருக்கும்.

* எதையும் அனுபவத்தால் அறிய வேண்டும் என்பதில்லை. பெரியவர்களின் அறிவுரைக்கு செவிசாய்த்தாலே அனுபவ அறிவு கிடைத்து விடும்.

* பந்தைச் சுவரில் எறிந்தால் அது நம்மை நோக்கித் திரும்புவது போல கோபமும் நமக்கு எதிராகவே திரும்பும்.

* பூமியை விட்டுச் செல்லும் முன் ‘என்னிடம் பாவமே இல்லை’ என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்.

* புல்லைக் கூட படைக்கும் ஆற்றல் நம்மிடமில்லை. அதனால் ‘நான்’ என்னும் ஆணவம் கூடாது.

* வாழ்வில் ஒழுக்கமும், நேர்மையும் இருந்தால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும், கலையுணர்வும் வந்து விடும்.

* பேசுவதில் கணக்காக இருந்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவு வராது. நம் சக்தியும் வீணாகாமல் இருக்கும்.

* எளிமை, உழைப்பு இரண்டும் மனிதனை மனநிறைவோடு இருக்க வழிகாட்டும் நற்பண்புகள்.

* மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான். மகிழ்ச்சி என்பது அவரவர் மனதைப் பொறுத்தே அமைகிறது.

– காஞ்சி பெரியவர்